டெல்லி: தேசிய தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் நிலையில், காற்று மாசை கட்டுபடுத்த பல நடவடிக்கையை டெல்லி அரசு எடுத்து வருகிறது. டெல்லி அரசை தொடர்ந்து, மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், உச்சநீதிமன்றமும் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில், தலைநகர் டெல்லியில் காற்று மாசின் அளவு புதன்கிழமை அதிகாலை, தீவிரம் என்ற அளவுக்கு சென்றது. மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள தரவுகளில், செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் 425 புள்ளிகளாக இருந்த காற்று மாசின் அளவு, புதன்கிழமை 6.40 மணியளவில் 457 புள்ளிகளாக அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அளவானது வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் கருதப்படுகிறது. கடந்த இரு நாட்களாக காற்று வீசும் திசையில் ஏற்பட்ட மாற்றத்தால், பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் வயல்வெளிகளுக்கு தீவைக்கப்படுவதால் உருவாகும் புகை டெல்லிக்கு வரத்தொடங்கியதே இந்த நிலைக்கு காரணமாக கூறப்படுகிறது.
இந்நிலையில், செவ்வாயன்று AQI "கடுமையான" பிரிவில் 453 ஆகவும், டெல்லியின் AQI 416 ஆகவும் இருந்தது என்று மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) தெரிவித்துள்ளது. தேசிய தலைநகர் பிராந்தியத்தின் AQI காசியாபாத் (445), நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா (436), ஃபரிதாபாத் (404) போன்றவையும் இதேபோன்ற அனுபவத்தைக் கொண்டிருந்தன. ஹரியானாவின் பானிபட் (462), ஹிசார் (406), ஜிந்த் (439) ஆகியோரும் "கடுமையான" பிரிவில் காணப்படுகிறது.
இதையடுத்து டெல்லியில் கடந்த வாரத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால், சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் காற்றின் தரம் சிறிதளவு முன்னேற்றம் கண்டது. இந்த நிலையில், மீண்டும் 450 புள்ளிகளுடன் கடின நிலை என்கிற அளவை எட்டியுள்ளதாக மாசு கட்டுப்பாட்டு அமைப்பு கூறியுள்ளது. டெல்லியில் கடைபிடிக்கப்பட்டு வரும் வாகன கட்டுப்பாடு திட்டத்தினை, குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு இரண்டு நாட்கள் தளர்த்தியதால் காற்று மாசு கிடுகிடுவென உயர்ந்ததாக கூறப்படுகிறது.
மேலும், பயிர்க் கழிவுகள் எரிப்பதை, அந்த மாநில அரசுகள் தடுக்க வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.டெல்லிவாசிகள் சுவாச கோளாறுகளால் அவதிபடும் நிலையில், விவசாயிகள் மாற்று ஏற்பாடுகளை செய்யவேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.