லடாக் மற்றும் காஷ்மீரை எப்போதும் விட்டுக் கொடுக்கமாட்டோம்: மோடி!

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது வரலாற்று சிறப்பு மிக்க முடிவு என பிரதமர் மோடி புகழாரம்!!

Last Updated : Aug 8, 2019, 09:13 PM IST
லடாக் மற்றும் காஷ்மீரை எப்போதும் விட்டுக் கொடுக்கமாட்டோம்: மோடி! title=

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது வரலாற்று சிறப்பு மிக்க முடிவு என பிரதமர் மோடி புகழாரம்!!

நாடாளுமன்றத்தில் கடந்த 5 ஆம் தேதி காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவு 370 திரும்பப்பெறப்படுவதாகவும், ஜம்மு- காஷ்மீர் மாநிலம், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேங்களாக உருவாக்கப்படும் எனவும் மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவித்தார். மேலும், சிறப்பு அந்தஸ்து திரும்பப்பெறப்படுவதற்கான தீர்மானத்திற்கு நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. 
 
இதனால் கடந்த சில தினங்களாக காஷ்மீரில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நெட்ஒர்க் மற்றும் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் (மறுசீரமைப்பு) மசோதா 2019-ஐ மையம் நிறைவேற்றியது. பல்வேறு அரசியல் கட்சிகளின் குரல் எதிர்ப்பின் மத்தியில் இந்த மசோதா நிறைவேற்றபட்டத்து. 125 உறுப்பினர்கள் அதற்கு ஆதரவாக வாக்களித்தனர், 61 பேர் அதற்கு எதிராக வாக்களித்தனர்.

இந்நிலையில், இதுகுறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இன்று இரவு 8 மணிக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது; வல்லபாய் படேல், அம்பேத்கர், ஷியாம பிரசாத் முகர்ஜி ஆகியோர் இந்திய ஒற்றுமையில் உறுதியாக இருந்தனர். காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா வரலாற்று முக்கியத்துவமான முடிவை எடுத்துள்ளது. இந்த முடிவால் ஜம்மு காஷ்மீரின் வரலாற்றில் புதிய அத்தியாயம் பிறந்துள்ளது. 

மத்திய அரசின் முடிவை ஏற்றுக் கொண்ட ஜம்மு காஷ்மீர் மக்களை மனதார பாராட்டுகிறேன். தீவிரவாதத்திற்கும், ஊழலுக்கும் 370 ஆவது பிரிவு ஊக்கமளித்துக் கொண்டிருந்தது. பயங்கரவாதம் பற்றி எரிய எரிபொருளாக இருந்த 370 ஆவது பிரிவு நீக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களுக்கான எதிர்காலம் பிரகாசமாக உள்ளது என பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் தெரிவித்தார். 

மேலும், ஜம்மு காஷ்மீரில் வளர்ச்சித் திட்டங்களுக்கு இருந்த தடைக்கல் பெயர்த்து எரியப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதத்தால் 42000 பேர் தங்கள் இன்னுயிரை இழந்திருக்கிறார்கள். 370 ஆவது பிரிவு நீக்கப்பட்டதன் மூலம் ஒன்றரை கோடி காஷ்மீரிகள் அதிக பலன்களை பெறப் போகிறார்கள். மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் நாடு முழுவதும் சென்றடையவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

காஷ்மீரில் தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களுக்கான இட ஒதுக்கீட்டை இனி யாரும் தடுக்க முடியாது. நான் சமீபத்தில் காஷ்மீர் சென்றிருந்தபோது சாலை மற்றும் மின்சார வசதிகள் மேம்பட்டிருப்பதைக் கண்டேன். காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி கொண்டு வரப்பட்ட பிறகு அங்கு வளர்ச்சி பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது. காஷ்மீரில் சினிமா படப்பிடிப்புகளுக்கான தடைகள் நீக்கப்படும். காஷ்மீரில் இனி திரைப்பட நிறுவனங்களைத் தொடங்கலாம். தமிழ், இந்தி, தெலுங்கு மொழிப் படங்களை தயாரிப்பவர்கள், காஷ்மீரில் படப்பிடிப்புகளை நடத்த முன்வர வேண்டும். சினிமா படப்பிகளை காஷ்மீரில் நடத்தியதால் அந்த மக்கள் வேலைவாய்ப்பு பெற்றனர். லடாக்கில் சூழலியல் சுற்றுலாக்கள் ஊக்கப்படுத்தப்படும். காஷ்மீரில் உள்ள மூலிகை வளங்களை சந்தைப்படுத்தி விவசாயிகளின் வாழ்க்கை மேம்படுத்தப்படும். ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக்கை புதிய பாதைக்கு அழைத்துச் செல்வோம்.

காஷ்மீர் மக்கள் பிரிவினைவாதிகளைத் தோற்கடிப்பார்கள். மாற்றுக்கருத்து உள்ளவர்களை மதிக்கிறோம்; ஆனால், தேசவிரோத நோக்கில் செயல்படக்கூடாது. லடாக் மற்றும் காஷ்மீரை எப்போதும் விட்டுக்கொடுக்க மாட்டோம். இனிமேல் ஜம்மு - காஷ்மீரையோ லடாக்கையோ தீவிரவாதம் தொட்டுக்கூட பார்க்க முடியாது. அனைவருக்கும் நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் மக்களின் எந்தவொரு பிரச்னையும் எங்கள் பிரச்னை. அவர்களின் மகிழ்ச்சி, சோகமான தருணங்களில் நாங்கள் அவர்களுடன் இருக்கிறோம்.

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல்கள் முழுமையான பாதுகாப்புடன் விரைவில் நடத்தப்படும். கடந்த 1947-க்குப் பிறகு மற்ற மாநிலங்களுக்கு உரிமைகள் கிடைத்தன. ஜம்மு - காஷ்மீரில் மட்டும் கிடைக்கவில்லை. காஷ்மீரில் ஆய்வு செய்து அரசு ஊழியர்கள், போலீஸாருக்கான சலுகைகளை உறுதி செய்வோம். விமான நிலைய உருவாக்கம், தரமான சாலை வசதி உள்ளிட்டவை அடுத்தடுத்து ஏற்படுத்திக் கொடுக்கப்படும். காஷ்மீரில் விளையாட்டு அரங்குகள் போன்றவை இல்லை. அவற்றில் கவனம் செலுத்தப்படும். காஷ்மீர் இளைஞர்கள் இந்தியாவின் பெயரை சர்வதேச அரங்கில் உயர்த்துவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது'' என்று பிரதமர் மோடி பேசினார். காஷ்மீர் மக்களுக்கு பக்ரீத் வாழ்த்துகளைத் தெரிவித்து, தனது உரையை பிரதமர் மோடி நிறைவு செய்தார். 8 மணிக்குத் தொடங்கி ஏறக்குறைய 39 நிமிடங்கள் அவர் நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.

 

Trending News