தெலுங்கானாவில் பெண் கால்நடை மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொன்ற 4 பேரை என்கவுன்டரில் சுட்டுக்கொன்ற காவல்துறைக்கு நடிகை நயன்தாரா பாராட்டடுகளை தெரிவித்துள்ளார்.
மேலும் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும் காட்டுமிராண்டிகளுக்கு இந்த என்கவுண்டர் நல்ல பதில் அளித்துள்ளது என்றும், இனி இவ்வாறான குற்றத்தில் யாரும் ஈடுப்படகூடாது என்ற பயத்தை உண்டாக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சரியான நேரத்தில் வழங்கப்படும் நீதிக்கு இணையில்லை. இந்த கூற்று உண்மையாகியிருக்கிறது உண்மையான நாயகர்களால். தெலங்கானா காவல் அதிகாரிகள் நீதியை நிலைநாட்டியிருக்கிறார்கள். காட்டுமிராண்டிகளின் சட்டத்துக்கு புறம்பாக பெண் மீது காட்டப்பட்ட வன்முறைக்கு எதிராக தீர்க்கமான பதிலளித்துள்ளார்கள். பெண்களின் முன்னேற்றத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வது நம் கடமை. இந்த நடவடிக்கை என்பது சரியாக வழங்கப்பட்ட நீதி. இதுவே நியாயமான மனிதமிக்க நடவடிக்கை என அழுத்தி சொல்வேன்.
நாட்டில் உள்ள பெண்கள் அனைவரும் இந்த நாளை, தேதியை பெண்களுக்கு சரியான நியாயம் கிடைத்த நாளாக குறித்து வைத்து கொள்ளலாம். பெண்களுக்கு இது சற்றே ஆறுதல். அவர்களுக்கு எதிராக வன்புணர்வு செய்யும் காட்டுமிராண்டிகளுக்கு இந்நடவடிக்கை சற்றேனும் பயன் தரும்.
மனிதம் என்பது அனைவரிடத்தும் சரிசமமாக மரியாதை தருவதும் , அன்பு செலுத்துவதும், இரக்கம் கொள்வதுமே ஆகும். நீதி கிடைத்திருக்கும் இத்தருணம் மகிழ்ச்சியே என்றாலும், நாம் நம் குழந்தைகளுக்கு பெண் பாதுகாப்பு குறித்த கல்வியை கற்றுக் கொடுக்க வேண்டியது அவசியம்.
குறிப்பாய் நம் ஆண் குழந்தைகளுக்கு பெண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை கற்று தர வேண்டும். பெண்களை மதிப்பவனே, பாதுகாப்பவனே நாயகன் என்பதை அழுத்தமாக அவன் மனதில் பதிய வைக்க வேண்டும். எதிர்கால உலகை பெண் மிதான வன்முறைக்கு எதிரான, அன்பான உலகாக மாற்ற வேண்டியது நம் கடமை. அப்போது தான் நாம் நிம்மதியான பெருமூச்சுடன் அன்பை அனைவரிடத்தும் பகிர்ந்து கொள்ள முடியும்" என தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் வெள்ளிக்கிழமை காலை காவல்துறை என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டனர். விசாரணையின் ஒரு பகுதியாக நிகழ்வுகளை புனரமைப்பதற்காக குற்றம் சாட்டப்பட்டவர்களை (முகமது, ஜொல்லு சிவா, ஜொலு நவீன் மற்றும் சிந்தகுந்தா சென்னகேசவுலு ஆகியோரை) காவல்துறையினர் அழைத்துச் சென்ற போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஹைதராபாத்தில் இருந்து சுமார் 60 கி.மீ தூரத்தில் ஷாட்நகரில் இந்த சம்பவம் நடைப்பெற்றுள்ளது.
கால்நடை மருத்துவரின் குடும்பத்தினர் இந்த சம்பவத்திற்கு பிறகு தெலுங்கானா காவல்துறையினரைப் பாராட்டியதோடு, தங்கள் மகளின் ஆத்மாவு தற்போது நிம்மதியாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தற்போது காவல்துறையின் செயல்பாட்டினை பாராட்டி தென்னிந்திய பிரபலம் நயன்தாரா அறிக்கை வெளியிட்டுள்ளார்.