மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று பலத்த பாதுகாப்புடன் எண்ணப்பட்டுவருகின்றன. இதில், மும்பை மாநகராட்சியைப் பொருத்தவரையில், இந்த முறை பா.ஜ.க.வும், சிவசேனாவும் தனித்தனியாக போட்டியிட்டன.
மராட்டிய மாநிலத்தில் மும்பை, தானே, உல்லாஸ்நகர், புனே, பிம்பிரி சிஞ்ச்வாட், சோலாப்பூர், நாசிக், அகோலா, அமராவதி, நாக்பூர் ஆகிய 10 மாநகராட்சிகளுக்கு பிப்ரவரி 21-ம் தேர்தல் நடைபெற்றது.
கடந்த 2012-ம் ஆண்டு தேர்தலின்போது பாரதீய ஜனதாவும் மற்றும் சிவசேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. ஆனால் இந்த தேர்தலில் பாரதிய ஜனதாவும், சிவசேனாவும் தனித்தே போட்டியிடுகிறது. பா.ஜனதா, சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், நவநிர்மாண் சேனா ஆகிய கட்சிகள் தனித்து களம் இறங்கியுள்ளன. இதனால் இதுவரை இல்லாத அளவுக்கு மும்பை மாநகராட்சி தேர்தலில் பலமுனை போட்டி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலை 10 மணி நிலவரப்படி சிவசேனா 10 வார்டுகளிலும், பா.ஜ.க. 9 வார்டுகளிலும் முன்னிலை பெற்றிருந்தது. காங்கிரஸ் 3 வார்டுகளை வெற்றியை நோக்கி முன்னேறியது. அதன்பின்னர் சிவசேனா வேட்பாளர்கள் பெரும்பாலான வார்டுகளில் முன்னிலை பெறத் தொடங்கினர். 11 மணி நிலவரப்படி சிவசேனா 36 வார்டுகளிலும், பா.ஜ.க. 24 வார்டுகளிலும் முன்னிலை பெற்றனர். காங்கிரஸ்-6, நவநிர்மாண் சேனா-4, தேசியவாத காங்கிரஸ்-2 என முன்னிலை நிலவரம் இருந்தது.
நாக்பூரில் பா.ஜ.க. 9 வார்டுகளிலும், காங்கிரஸ் ஒரு வார்டிலும் முன்னிலை பெற்றுள்ளது.
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.