சிபிஐக்கு புதிய இயக்குனரை நியமனம் செய்வது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையிலான மூன்று நபர் கொண்ட தேர்வுக் குழு கூட்டம்.....
மத்திய அரசினால் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட அலோக் வர்மாவை உச்ச நீதிமன்றம் சிபிஐ இயக்குநராக மீண்டும் நியமித்தது. மேலும் தேர்வுக் குழு அலோக் வர்மா குறித்த முடிவை எடுத்துக் கொள்ளட்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்தது.
77 நாட்கள் கட்டாய விடுப்பில் இருந்த அலோக் வர்மா உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐ அலுவலகம் வந்தார். அடுத்த நாளே (ஜனவரி 10) பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான உயர்மட்டக் குழு நடத்திய சுமார் 2 மணி நேரக் கூட்டத்துக்குப் பிறகு அலோக் வர்மா நீக்கப்பட்டார்.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், மக்களவை காங்கிரஸ் குழுத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் கொண்ட இக்குழு பதவி நீக்கம் செய்யப்பட்ட அலோக்வர்மாவுக்கு பதிலாக புதிய சிபிஐ இயக்குனரை தேர்வு செய்ய உள்ளது.
இக்குழுவில் இடம் பெற்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் சிபிஐ இயக்குனர் நீக்கம் தொடர்பான வழக்கை விசாரிக்கும் அமர்வில் இடம்பெற்றிருப்பதால் தமக்குப் பதிலாக மூத்த நீதிபதியான ஏ.கே.சிக்ரியை குழுவில் இடம் பெறச் செய்தார்.
சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா இருவரும் பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் புகார் கூறி மோதலில் ஈடுபட்டதையடுத்து அவர்கள் இருவரும் சிபிஐயின் உயரிய பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
அலோக் வர்மா தமது நீக்கத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். ராகேஷ் அஸ்தானா தம் மீதான சிபிஐயின் வழக்கை ரத்து செய்யக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார்.