மூன்று நாள் சுற்றுப்பயணமாக தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா வியாழக்கிழமை அன்று இந்தியா வந்து சேர்ந்தார்.
கடல்சார் பாதுகாப்பு, பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ளுதல், வர்த்தகத்தை மேம்படுத்துதல் ஆகிய விவகாரங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். தெற்கு சீன கடல் பகுதியில் நிலவும் சூழல் குறித்து இரண்டு தலைவர்களும் விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தாய்லாந்து பிரதமருடன் அவரது மனைவி நரபோர்ன் சான்-ஓ-சா, அந்நாட்டின் அமைச்சர்கள், உயரதிகாரிகள் உள்ளிட்ட 46 பிரதிநிதிகளும் இந்தியா வந்தனர். அவர்களை மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு தில்லி விமான நிலையத்தில் நேற்று வரவேற்றார்.
இதுகுறித்து வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தாய்லாந்துடனான இந்தியாவின் நல்லுறவுகள் முக்கியமானவை. இந்தியாவின் "கிழக்கை நோக்கிய கொள்கை'யுடன், தாய்லாந்தின் "மேற்கை நோக்கிய கொள்கை'யும் இணைந்து இரண்டு நாடுகளும் நெருக்கமாகச் செயல்படுகின்றன.
இந்தியாவும், தாய்லாந்தும் வலுவான பொருளாதார உறவையும், இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடுகளை அதிகரிக்கும் பன்முகத் தோற்றத்தையும் கொண்டுள்ளன. இரண்டு நாடுகளின் நெருங்கிய உறவை இவை பிரதிபலிக்கின்றன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரியையும் இன்று சந்திக்கவிருக்கும் சான்-ஓ-சா, எஃப்ஐசிசிஐ, சிஐஐ, அசோசெம் ஆகிய அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ள வர்த்தக நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுப் பேசுகிறார். மேலும் இந்தியாவுக்கும், தாய்லாந்துக்கும் இடையேயான கூட்டு வர்த்தக அமைப்பின் முதல் கூட்டத்திலும் அவர் பங்கேற்கிறார்.
பிரதமர் மோடி-சான் இடையேயான பேச்சுவார்த்தையில், இரு நாடுகளுக்கும் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.