நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் அக்ஷய், பவன், வினய் ஆகிய 3 பேர் தரப்பில் சர்வதேச நீதிமன்றத்தில் முறையீடு..!
நிர்பயா வழக்கின் குற்றவாளிகளை வரும் 20 ஆம் தேதி தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், குற்றவாளிகளை கருணைக் கொலை செய்யும்படி அவர்களது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் அக்ஷய், பவன், வினய் ஆகிய 3 பேர் தரப்பில் சர்வதேச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர்.
நிர்பயா பலாத்காரம் மற்றும் கொலை வழக்கு குற்றவாளிகள் 4 பேரையும் வரும் 20 ஆம் தேதி காலை 5.30 மணிக்கு தூக்கிலிட்டு தண்டனையை நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து திகார் சிறை எண் 3-ல் குற்றவாளிகள் நால்வரையும் தூக்கிலிட அனைத்து ஏற்பாடுகளையும் சிறை நிர்வாகம் செய்து முடித்து தயார் நிலையில் வைத்துள்ளது. இதற்கிடையில், அனைத்து சட்ட வாய்ப்புகளையும் பயன்படுத்தி தூக்குதண்டனையில் இருந்து 3 முறை தப்பித்த குற்றவாளிகள் முகேஷ் குமார் சிங் (32), பவன் குப்தா(25), வினய் சர்மா(26) மற்றும் அக்ஷய் குமார் சிங்(31) ஆகியோர் வாய்ப்புகள் அனைத்தும் முடிவுக்கு வந்ததையடுத்து மரண தண்டனைக்கான நாட்களை எண்ணிக்கொண்டு உள்ளனர்.
2012 Delhi gang rape case: Three convicts have approached the International Court of Justice (ICJ) seeking stay on the execution of their death sentence. The three convicts who approached the ICJ are Akshay, Pawan and Vinay. pic.twitter.com/i4kxdjTMcY
— ANI (@ANI) March 16, 2020
இந்த நிலையில், குற்றவாளிகளை கருணை கொலை செய்ய கோரி, அவர்களது குடும்பத்தினர் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கடிதங்களை அனுப்பியுள்ளனர். குற்றவாளி முகேஷின் குடும்பத்தினரிடம் இருந்து 2 கடிதங்கள், பவன் மற்றும் வினய் ஷர்மாவின் குடும்பத்தினரிடம் இருந்து தலா 4 கடிதங்கள் மற்றும் அக்ஷயின் குடும்பத்தினரிடம் இருந்து 3 கடிதங்கள் என மொத்தம் 13 கடிதங்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் அக்ஷய், பவன், வினய் ஆகிய 3 பேர் தரப்பில் சர்வதேச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனைக்கு தடை விதிக்க வேண்டும் என குற்றவாளிகள் தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதனால், மீண்டும் இவர்களுக்கான தண்டனை தேதி மாற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.