அமெரிக்கா, போர்ச்சுகல், நெதர்லாந்து ஆகிய 3 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இன்று பிரதமர் மோடி டெல்லி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றார். அவரை அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர்.
அமெரிக்க அதிபர் டிரம்ப்பை திங்கட்கிழமையன்று அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். தனது பயணத்தின் முதல் நாடாக போர்ச்சுக்கல் செல்கிறார் மோடி. அந்நாட்டு பிரதமர் அந்தோனியோ கோஸ்டாவை அவர் சந்தித்துப் பேசும்போது இருநாடுகளுக்கு இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அங்கிருந்து அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி, திங்கட்கிழமை பிற்பகல் வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப்பை அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு முதல் முறையாக இரு தலைவர்களும் சந்தித்துக்கொள்வது சர்வதேச அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு 27ம் தேதி பிரதமர் மோடி நெதர்லாந்து செல்கிறார். இந்தியா-நெதர்லாந்தின் 70 ஆண்டு நட்பை கௌரவிக்கும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க உள்ளார். அந்நாட்டுப் பிரதமர் மார்க் ரூட்டுடன், பிரதமர் மோடி பேச்சு நடத்த உள்ளார்.
இந்த 3 நாடுகள் சுற்றுப்பயணத்தின் மூலம் வர்த்தகம், அறிவியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட பிரிவுகளில் இணைந்து செயல்படுவதற்கான பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது என பிரதமர் மோடி தனது டுவிட்டரில் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.