நாட்டின் 68-வது குடியரசு தின விழா, கோலாகலமாக நாளை கொண்டாடப்படவிருக்கிறது. இதனை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது பேசிய அவர் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா என பெருமிதம் தெரிவித்தார்.
பிரணாப் முகர்ஜி உரையில் பேசியதாவது:-
நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது குடியரசு தின வாழ்த்துக்கள். கடந்த 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதியன்று நமக்கு சுதந்திரம் கிடைத்தது. ஆனால், நமக்கென சொந்த ஆட்சி அதிகாரம், அரசியலமைப்பு இல்லை. அதற்காக 1950-ஆம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி வரை நாம் காத்திருந்தோம். அன்றைய தினத்தில் நமக்கென்று அரசியலமைப்பு வழங்கப்பட்டு உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா உருமாறியது.
அதன்படி, 68-வது குடியரசு தினத்தை கொண்டாடும் இந்த தருணத்தில் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். நாட்டின் பாதுகாப்பிற்கு உறுதுணையாக விளங்கும் ராணுவ வீரர்களுக்கு, எனது வீர வணக்கங்கள். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு சகிப்புத்தன்மை, பொறுமை, மரியாதை அவசியம். கடந்த 2014-ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் 66 சதவீத வாக்கு பதிவானது நமது ஜனநாயகத்தின் வலிமையை காட்டுகிறது.
சர்வதேச அளவில் சவாலான சூழ்நிலை நிலவியபோதும் இந்தியப் பொருளாதாரம் சிறப்பாக விளங்கியது. உலக அளவில் இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது. இந்திய பொருளாதாரம் அதிவேகமாக வளர்ந்து வருகிறது. அறிவியல், தொழில்நுட்பத்தில் 2-வது மிகப்பெரிய சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது. உலகின் 10-வது தொழில்துறை சக்தியாக இந்தியா திகழ்கிறது. நாட்டு மக்களுக்கு உணவு பாதுகாப்பை உறுதிசெய்ய, நாம் கடுமையாக உழைக்க வேண்டும். உணவு பொருட்களின் ஏற்றுமதியில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.
உலக அளவில் விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா 6-வது இடத்தில் உள்ளது. நமது கல்வி முறை கண்டுபிடிப்புகளுடன் கைகோர்க்க வேண்டும். இன்றைய இளைஞர்கள் நம்பிக்கையுடனும், எதிர்பார்ப்புகளுடனும் உள்ளனர். நாட்டில் குழந்தை தொழிலாளர் முறை அறவே இருக்கக் கூடாது. குழந்தைகள், பெண்களின் பாதுகாப்பிற்கு நாம் மேலும் பாடுபட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். பன்முகத்தன்மையே இந்தியாவின் வலிமை. ராணுவ பலத்தில் நாம் நான்காவது இடத்தில் உள்ளோம்.
நாட்டை மேம்படுத்த அரசு பல திட்டங்களை வகுத்து வருகிறது. ரூபாய் நோட்டு விவகாரம் வெளிப்படைத் தன்மையை உருவாக்கி உள்ளது. ரொக்கமில்லா பண பரிவர்த்தனை தற்போதைய பண தட்டுப்பாட்டை விரைவில் சீராக்கும்.
மனித வாழ்க்கையின் அனுபவத்திற்கு மகிழ்ச்சியே அடிப்படை. பொருளாதாரம் மற்றும் பொருளாதாரம் அல்லாத காரணிகளின் சமமான விளைவாக மகிழ்ச்சி விளங்குகிறது. நிலையான வளர்ச்சியுடன் மகிழ்ச்சியானது நெருக்கமான தொடர்பை பெற்றுள்ளது. மக்களின் நல்வாழ்வு மற்றும் மகிழ்ச்சியை பொதுக் கொள்கையின் அளவுகோலாக நாம் உருவாக்க வேண்டும் என்றார்.