200 சட்டமன்றத் தொகுதிகளை கொண்டுள்ள ராஜஸ்தானில் அடுத்த மாதம் டிசம்பர் 7 ஆம் தேதி தேர்தல் நடைபெற விருக்கிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 11 ஆம் தேதி நடைபெறும். ராஜஸ்தான் மாநிலத்தில் ஆட்சி அமைக்க பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. ராஜஸ்தானில் பாஜக தங்கள் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளவும், காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றவும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இரண்டு கட்சிகளிலும் இருந்து சில தலைவர்கள் தங்களுக்கு சீட் கொடுக்கவில்லை என்று கூறி ராஜினாமா செய்துள்ளனர். பிஜேபி-யில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கும், காங்கிரஸில் இருந்து பிஜேபிக்கும் அணி மாறியுள்ளனர்.
ஏற்கனவே பாரதிய ஜனதா கட்சி சார்பில் இரண்டு வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடப்பட்டு உள்ளது. இந்நிலையில் இன்று எட்டு பேர் அடங்கிய மூன்றாவது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. இதுவரை மொத்தம் 170 வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்துள்ளது. இன்னும் 30 வேட்பாளர்களின் பெயர்களை அறிவிக்க உள்ளது. தங்களுக்கு சீட் கொடுக்கவில்லை என்றால் கட்சியை விட்டு சென்றுவிடுவோம் என மிரட்டிய சில தலைவர்களின் பெயர்கள் அடுத்த பட்டியலில் இடம் பெறுமா? என எதிர்பார்ப்பு ஏற்ப்பட்டு உள்ளது.
அதேபோல காங்கிரஸ் கட்சியும் 184 வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்துள்ளது. மீதி உள்ள 16 வேட்பாளர்களின் பெயர்களை விரைவில் அறிவிக்க உள்ளது.