கண்ணூர் நகரில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு MLA வீடு மீது நாட்டு வெடிகுண்டை வீசிய விவகாரத்தில் போலீசார் 20 பேரை கைது....
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பை எதிர்த்து தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சார்பில் 48 சீராய்வு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு பின்னர் இந்த மனுக்களை விசாரணைக்கு ஏற்பதாக என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அமர்வு முடிவு செய்தது. மேலும் இம்மாதம் 22-ஆம் நாள் முதல் சீராய்வு மனுக்கள் மீது விசாரணை நடைபெறும் என்றும் அறிவித்துள்ளனர்.
இதற்கிடையில் வரும் ஜனவரி 14-ஆம் நாள் மகரஜோதி தரிசனம் நடைபெறுவுள்ள நிலையில் கடந்த டிசம்பர் 30-ஆம் நாள் மகரவிளக்கு கால பூஜைகளுக்காக நடை திறக்கப்பட்டது. வரும் ஜனவரி 19-ஆம் நாள் வரை நடை திறந்திருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.
மகர விளக்கு பூஜைக்காக தற்போது சபரிமலை நடை திறக்கப்பட்டுள்ள நிலையில் கடத்ம ஜனவரி 2-ஆம் நாள் கனகதுர்கா(44), பிந்து(42) என்னும் இரு பெண்கள் சபரிமலை கோவில் உள் அனுமதிக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. சம்பவநாள் அன்று காலை சுமார் 3.45 மணிக்கு அவர்கள் தரிசனம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து சபரிமலை நடை சுமார் 1 மணிநேரம் அடைக்கப்பட்டு சிறப்பு பரிகார பூஜை நடைப்பெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சபரிமலையில் பெண்களை அனுமதித்தை கண்டித்து, சபரிமலை கர்ம சமிதி என்ற அமைப்பு சார்பில், கேரள மாநிலத்தில் நேற்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. போராட்டத்தின்போது, சாலைகளில் ஊர்வலமாக வந்த பாஜகவினரை, கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வழிமறித்துத் தாக்கினர். இதனால், பல இடங்களில் வன்முறை வெடித்தது.
இந்த வன்முறையில் 30 போலீசார் காயமடைந்தனர். 750 பேர் கைது செய்யப்பட்டனர். வன்முறை சம்பவங்களின் எதிரொலியாக பாலக்காடு, மஞ்சேசுவரம் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், கேரளாவின் கண்ணூர் நகரில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. ஷம்சீர் வீடு மீது நேற்றிரவு 10.15 மணியளவில் நாட்டு வெடிகுண்டு ஒன்று வீசப்பட்டது. இதுபற்றி, வன்முறையை தூண்டிவிட ராஷ்டீரிய சுவயம்சேவக் சங்க அமைப்பினர் திட்டமிட்ட சதியிது என ஷம்சீர் ஊடகங்களிடம் கூறினார். வன்முறையை உருவாக்கி அமைதியான சூழ்நிலையை ஒழிப்பதே அவர்கள் நோக்கம் என அவர் கூறியுள்ளார்.
இதன்பின்னர் சில மணிநேரங்கள் கழித்து நடந்த பதில் தாக்குதலில், கண்ணூர் நகரில் உள்ள பா.ஜ.க.வின் முன்னாள் மாநில தலைவர் முரளிதரன் வீடு மீது வெடிகுண்டு ஒன்று வீசப்பட்டது. இதில் யாரும் காயமடையவில்லை.
இதேபோன்று தலச்சேரி பகுதியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளரான பி. சசி வீடு மீது அடையாளம் தெரியாத நபர்கள் வெடிகுண்டுகளை வீசி விட்டு சென்றனர். இந்த நிலையில், ஷம்சீர் வீடு மீது நாட்டு வெடிகுண்டை வீசிய விவகாரத்தில் போலீசார் 20 பேரை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.