ஜன,25-ஆம் தேதி வெளியாகும் ''பத்மாவத்'' திரைப்படம் காண ராஜ்புத் கர்ணி சேனா சமூகத்தினருக்கு சஞ்சய் லீலா பன்சால் அழைப்பு விடுத்துள்ளார்.
உலகம் முழுவதும் பெரும் பரபரப்பாக பேசப்படும் பத்மாவதி எனும் ''பத்மாவத்'' திரைப்படம் வரும் ஜன.,25-ஆம் நாள் நாடுமுழுவதும் ஹிந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ளது. சித்தூர் ராணி பத்மினியின் கதையினை இந்தியில் ‘பத்மாவதி’ என்ற பெயரில் சினிமாவாக படமாக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தினை பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சால் இயக்க, நடிகை தீபிகா படுகோனே ராணி பத்மினியாக நடித்துள்ளார். இப்படத்தில் சித்தூர் ராணி பத்மினியின் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டு உள்ளதாக ராஜஸ்தான், குஜராத் மற்றும் மராட்டிய மாநிலத்தில் வசிக்கும் ராஜ புத்திர வம்சத்தினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இத்திரைப்படம் குறித்து தொடர்ந்து பல சர்சைகளை ஏற்படுத்தி வந்த நிலையில், இப்படத்திற்கு U/A சான்றிதழினை டெல்லி திரைப்பட தனிக்கை குழு அளித்தது. இதனையடுத்து இப்படம் வரும் ஜனவரி 25-ஆம் நாள் 'பத்மாவத்' என்ற பெயரில் வெளியாகும் என படக்குழு அறிவித்தது.
இப்படத்தினை மத்தியபிரதேஷ், ராஜஸ்தான், குஜராத் மற்றும் ஹரியானாவில் திரையிட அம்மாநிலம் தடை விதிப்பதாக அறிவித்தது. இதனையடுத்து இப்படத்திற்கு தடை விதித்ததினை எதிர்த்து, படத்தின் தயாரிப்பாளர் உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தது.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் மத்தியபிரதேஷ், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் குஜாராத் மாநிலத்தில் பத்மாவத் படத்தை திரையிட எந்த தடையும் இல்லை என நேற்று முன்தினம் அறிவித்துள்ளது.
அதை தொடர்ந்து, மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் (சிபிஎப்சி) பத்மாவத் திரைப்படத்திற்கு சான்றிதழ் வழங்கியதை ரத்து செய்ய வேண்டும் என கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி ஏ.எம் கான்வில்கர் மற்றும் டி ஒய் சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசரணைக்கு வந்தது. மனுவில் படம் திரைக்கு வந்தால், உயிர், சொத்துக்களுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படும் எனவும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டதை நீதிபதிகள் நிராகரித்தனர்.
இருப்பினும், சில அமைப்புகள் உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்க முடியாது எனவும் நாடு தழுவிய அளவில் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், இத்திரைப்படம் ஜன,25-ஆம் தேதி வெளியாவது தீர்ப்பில் உறுதியாகியுள்ளதால், ''பத்மாவத்'' திரைப்படம் காண ராஜ்புத் கர்ணி சேனா சமூகத்தினருக்கு இந்த படத்தின் பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சால் தற்போது அழைப்பு விடுத்துள்ளார்.
Rajput Karni Sena claims it has been invited by #SanjayLeelaBhansali to watch #Padmaavat pic.twitter.com/PgiP5qtU8L
— ANI (@ANI) January 20, 2018