CBI vs CBI: வழக்கின் விசாரணை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!

CBI ஊழல் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அலோக் வர்மா தாக்கல் செய்த மனுவின் மீதான விசாரணையை வரும் 29-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 20, 2018, 12:24 PM IST
CBI vs CBI: வழக்கின் விசாரணை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்! title=

CBI ஊழல் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அலோக் வர்மா தாக்கல் செய்த மனுவின் மீதான விசாரணையை வரும் 29-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது!

CBI ஊழல் புகார் தொடர்பாக கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள அலோக் வர்மா தனது கட்டாய விடுப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனுவின் மீதான விசாரணை வரும் நவம்பர் 29-ஆம் ஒத்திவைப்பதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பான மத்திய புலனாய்வு ஆணையத்தின் அறிக்கையின் ஒருபகுதி ஊடகங்களில் வெளியான பிறகு, இந்த மனுவின் மீதான விசாரணையில் அவசரம் தேவையில்லை எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

முன்னதாக ஊழல் புகார் தொடர்பாக CBI இயக்குநர் அலோக் வர்மா, ராகேஷ் அஸ்தானா ஆகியோர் மத்திய அரசால் கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து இணை இயக்குநர் எம். நாகேஸ்வர் ராவ் இடைக்கால இயக்குநராகப் பதவி வகித்தது வருகின்றார்.

தன்னிச்சை அமைப்பான CBI-ல் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை பெரும் சர்ச்சைகளுக்கு ஆளானது. பின்னர் இதுதொடர்பான விளக்கம் அளித்த CBI, "அலோக் வர்மா தொடர்ந்து CBI அமைப்பின் இயக்குநர் பதவியில் இருப்பார் எனவும், சிறப்பு இயக்குநர் பதவியில் ராகேஷ் அஸ்தானா தொடர்கிறார். மத்திய ஊழல் கண்காணிப்பு அமைப்பு பரிந்துரை செய்ததன் அடிப்படையில் அவர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர்'' எனவும் தெரிவித்தது.

எனினும் தன்னைக் கட்டாய விடுப்பில் மத்திய அரசு அனுப்பியதை எதிர்த்து இயக்குநர் அலோக் வர்மா உச்ச நீதிமன்றத்தின் உதவியை நாடினார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ஓய்வுபெற்ற நீதிபதி AK பட்நாயக் மேற்பார்வையில் மத்திய புலனாய்வு ஆணையம் விசாரணை நடத்தி அதன் அறிக்கையை தாக்கல் செய்யுமாறும், இடைக்கால சிபிஐ இயக்குனர் நாகேஸ்வர ராவ் இதுவரை மேற்க்கொண்ட நடவடிக்கை குறித்த அறிக்கையையும் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது. 

இதனையடுத்து கடந்த நவம்பர் 12-ஆம் நாள் மத்திய புலனாய்வு ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தனது அறிக்கையை தாக்கல் செய்தது. அதேபோல தான் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையையும் சிபிஐ இடைக்கால இயக்குனர் நாகேஸ்வர ராவும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். 

இதனைத்தொடர்ந்த கடந்த நவம்பர் 16-ஆம் நாள் நடைப்பெற்ற விசாரணையில் "மத்திய அரசிற்கு ஆட்சேபனை இல்லை என்றால், மத்திய புலனாய்வு அமைச்சக அறிக்கையை மனுதாரரிடம் ஒப்படைக்கப்படலாம். மனுதாரர் அறிக்கையின் ரகசியத்தை காக்க வேண்டும்." என குறிப்பிட்டு வழக்கின் விசாரணையினை நவம்பர் 20-ஆம் தேதி(இன்று) ஒத்திவைத்தது. இதற்கிடையில் மத்திய புலனாய்வு அறிக்கையின் ஒருபகுதி, அலோக் வர்மாவின் விளக்கப்பதில் அறிக்கை செய்தி ஊடகங்களில் வெளியானது. நீதிமன்ற நிபந்தனையினை மீறி இந்த தகவல்கள் ஊடகங்களுக்கு வெளியானது புரியாத புதிராக இருக்கும் நிலையில் இன்று இந்த வழக்கின் மீதான விசாரணை நடைப்பெற்றது. 

வழக்கினை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு இந்த மனுவின் மீதான விசாரணை வரும் நவம்பர் 29-ஆம் ஒத்திவைப்பதாக தெரிவித்துள்ளது!

Trending News