இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு உங்களுக்காக, ஒரு நிமிட வாசிப்பிற்காக தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது.
- சுதந்திர போராட்ட வீரர் மற்றும் இந்து ஐகான் வீர் சாவர்க்கர் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் கூறிய கருத்தை விமர்சித்ததற்காக மும்பை பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் கட்டாய ‘விடுப்பில்’ அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. மும்பை பல்கலைக்கழகத்தில் தியேட்டர் ஆர்ட்ஸ் அகாடமியின் இயக்குநராக பணியாற்றும் யோகேஷ் சோமன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில் அவர் சாவர்க்கர் குறித்து ''ஆட்சேபகரமான'' கருத்துக்களை தெரிவித்ததற்காக காங்கிரஸ் தலைவரை விமர்சித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு விழா களை கட்டி வருகிறது. இன்று முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை ஜல்லிக்கட்டு நடைபெறும். அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்காக 730 காளைகளும், உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூரில் 700 காளைகளும், பாலமேட்டில் 650 காளைகளும் இந்தாண்டு பதிவு செய்யப்பட்டுள்ளன. இதை முன்னிட்டு ஜல்லிக்கட்டு காளைகளின் உடல்நல ஆய்வுகளை அதிகாரிகள் மேற்கொண்டனர். ஜல்லிக்கட்டை முன்னிட்டு மாடுபிடி வீரர்களும் உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்க காளைகள் தயாராக வந்துள்ளன. ஜல்லிக்கட்டை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களில் ஆம்புலன்ஸ்களுடன் மருத்துவக்குழு தயார்நிலையில் உள்ளது.
- காஷ்மீர் பள்ளத்தாக்கில் இன்று முதல் பிராடுபேண்டு இன்டர்நெட் சேவை மீண்டும் தொடங்கப்படுகிறது. அடுத்த 48 மணிநேரத்தில் பள்ளத்தாக்கில் படிப்படியாக இந்த சேவை நீட்டிக்கப்படும். முதலில் ஸ்ரீநகர், பட்காம், கந்தெர்பாலை தொடர்ந்து வடக்கு காஷ்மீரில் குப்வாரா, பந்திபோரா, பாரமுல்லாவில் பிராடு பேண்ட் சேவை வழங்கப்படும். இறுதியாக தெற்கு காஷ்மீரின் புல்வாமா, குல்கம், சோபியான், அனந்த்நாகில் விரிவுப்படுத்தப்படும். நிலைமை ஆய்வு செய்தபின் தொலைபேசி இணைய சேவை வழங்குவது குறித்து ஆளுநர் முடிவெடுப்பார். இந்நிலையில் ஜம்முவில் மொபைல் போன்களுக்கான 2ஜி சேவைகள் இன்று தொடங்கும். கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று பிரிவு 370 நீக்கத்துக்குப்பின் இணைய சேவைகள் முடக்கப்பட்டன. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம் தனது தீர்ப்பில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இணையசேவை கட்டுப்பாடு குறித்து ஒருவாரத்துக்குள் ஆய்வு செய்து, அத்தியாவசியான பகுதிகளில் இணைய சேவை வழங்க வேண்டுமென மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
- நிர்பயா கொலையாளிகள் தங்களது தண்டனையை தள்ளிப்போடுவதற்காக பல வழிமுறைகளை கையாளுகின்றனர். கொலையாளிகள் முகேஷ் மற்றும் வினய் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவருக்கு கருணை மனுவை முகேஷ் அனுப்பியுள்ளார். அத்துடன் பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் விதித்த மரணதண்டனையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளார். முகேஷின் மனுவை உயர் நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. நிர்பயா கொலையாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு ஜனவரி 22-ஆம் தேதி காலை 7 மணிக்கு பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் ஏற்கெனவே நேரம் குறித்துள்ளது. இந்நிலையில் அடுத்தடுத்து பல வழிமுறைகளை கையாண்டு தண்டனையை தள்ளிப்போட கொலையாளிகள் முயற்சிக்கின்றனர்.
- தில்லியின் சீலாம்பூர் வன்முறையில் தொடர்புடைய அப்துல் ரகுமான் என்ற கவுன்சிலருக்கு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட ஆம் ஆத்மி வாய்ப்பளித்துள்ளது. சீலாம்பூரில் வன்முறையையும் கலவரத்தையும் தூண்டிவிட்டதாக அப்துல் ரகுமான் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சிஏஏவுக்கு எதிராக வன்முறை கும்பலுக்கு தலைமை தாங்கியதாக போலீஸ் FIR-ரில் பெயர் சேர்க்கப்பட்டுள்ள அப்துல் ரகுமானுக்கு ஆம் ஆத்மி சீட் வழங்கியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இப்போது ஜாபராபாத் கவுன்சிலராக அப்துல் ரகுமான் உள்ளார். சீலாம்பூரின் தற்போதைய எம்எல்ஏ ஹாஜி இர்ஷாராக்குக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு அவருக்கு பதிலாக அப்துல் ரகுமானை ஆம் ஆத்மி களம் இறக்குகிறது.
- உத்தரப்பிரதே முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சித்தலைவருமான மாயாவதி இன்று தனது 64ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கடந்த முறையைப் போலவே இப்போதும் தனது பிறந்தநாளை பொதுமக்கள் நலதினமாக மாயாவதி கொண்டாடுகிறார். இதையொட்டி லக்னௌவில் இன்று நடைபெறும் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் எனது வாழ்க்கைப் போராட்டம்-15 என்ற அவரது அரசியல் அனுபவ நூலை வெளியிடுகிறார். ஆண்டுதோறும் அவரது பிறந்தநாளில் புத்தகத்தை வெளியிடும் மாயாவதிவின் இந்த நூல் வரிசை- ப்ளூ புக் என அழைக்கப்படுகிறது.
- ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் பட்டம் விடும்போது தவறுதலாக மாடியிலிருந்து விழுந்து இருவர் உயிரிழந்தனர். ஜெய்ப்பூரில் பட்டம் விடும்போது இதுவரை 300க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில் மாஞ்சா கயிற்றில் அறுபட்டு இதுவரை 155 பேர் ஜெய்ப்பூர் அரசுமருத்துவனையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுள்ளனர். இதில் 51 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதுதவிர ஜெய்புரியா, கங்கௌரி, கவாந்தியா மற்றும் சேது காலனி மருத்துவமனைகளில் மாஞ்சா கயிறு அறுத்து 34 பேர் சிகிச்சை பெறுகின்றனர். ஆபத்தான சீன மாஞ்சா கயிறை பயன்படுத்தி பட்டம் விடுவதற்கு ராஜஸ்தான் மாநில அரசு ஏற்கெனவே தடை விதித்துள்ளது. இருப்பினும் கடைகளில் திருட்டுத்தனமாக மாஞ்சா கயிறு அமோகமாக விற்பனை செய்யப்படுகிறது. சீன மாஞ்சா கயிறினால் பல பேரின் உயிர் காவு வாங்கப்பட்டுள்ளது.
- உத்தரப்பிரதேச பாஜக மூத்த தலைவரும் தொழிலாளர் அதிகார வாரியத் தலைவருமான ரகுராஜ் தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் யோகிக்கு கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில் அவர், ஜனவரி 12ஆம் தேதி தான் பேசிய கருத்தால் ஆத்திரமடைந்துள்ள சர்வதேச பயங்கரவாத இயக்கம் ஒன்று, தன்னையும் பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆகியோரையும் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்போவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளதால் தனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று ரகுராஜ் சிங் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக யோகியை எதிர்ப்பவர்களின் கதையை மோடி முடிப்பார் எனக்கூறியது சர்ச்சையை கிளப்பியிருந்தது.
- உத்தரப்பிரதேசத்தின் கௌதம புத்தா நகரின் முதல் போலீஸ் கமிஷனராக அலோக் சிங் இன்று பொறுப்பேற்கிறார். இதன்மூலம் நொய்டாவின் முதல் போலீஸ் கமிஷனர் என்ற பெருமையை அவர் பெறுகிறார். கிரேட்டர் நொய்டாவில் உள்ள போலீஸ் தலைமையகத்தில் அலோக் சிங் பொறுப்பேற்கும் முன்னதாக பழைய போலீஸ் ஆவணங்கள் எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. கௌதம புத்தா நகர் சரகத்துக்குள்பட்ட சுர்ஜபூர் காவல்நிலையத்தில் பல முக்கிய வழக்கு ஆவணங்கள் எரிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. புதிய கமிஷனர் பதவியேற்பதற்கு முன் அவரிடம் எதையோ மறைப்பதற்காக இந்த சதி நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே ஆவணங்களை எரிக்க உத்தரவிட்டவர்கள் மற்றும் அதை எரித்த அதிகாரிகள் பற்றி விசாரணை நடத்த நொய்டா காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
- காப்பதில் இந்திய ராணுவம் மீண்டும் பாராட்டுக்குரிய பணியைச் செய்துள்ளது. லடாக்கில் டிரெக்கிங் சென்ற சுற்றுலாப் பயணிகள் குழு ஜான்ஸ்கர் ஆற்றைக் கடந்தபோது ஆபத்தில் சிக்கிக் கொண்டது. இதுகுறித்து ராணுவத்துக்கு லடாக் யூனியன் பிரதேச நிர்வாகம் தகவல்கொடுத்தது. இதைத் தொடர்ந்து உடனடியாக செயல்பட்ட ராணுவ மீட்புக்குழுவினர், ஆபத்தில் சிக்கிய பயணிகளை மீட்க இரு திசைகளில் இருந்து தேடுதலைத் தொடங்கினர். ராணுவ ஹெலிகாப்டர்களும் இதில் ஈடுபடுத்தப்பட்டது. இந்நிலையில் சுற்றுலாப் பயணிகளை பத்திரமாக மீட்ட குழுவினர் அவர்களை லேயில் உள்ள ராணுவ மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். இதில் 6 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.