டெல்லியிலிருந்து வாரணாசிக்கு 160 கி.மீ.வேகத்தில் செல்லக்கூடிய உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரிக்கப்பட்ட இந்த ரயில் தயாரிக்க ரூ.97 கோடி செலவாகியுள்ளது. இந்த ரயிலுக்கு 'வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயல் வெளியிட்ட அறிக்கையில்.,
இந்த ரயில் நாட்டிலேயே அதிகவேகமாக செல்லக்கூடியது. 16 பெட்டிகள் கொண்ட இந்த ரயில் கடந்த 18 மாதங்களில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் என்ஜின் இல்லாமல் முதன்முதல் தயாரிக்கப்பட்டுள்ளது. இது முழுக்கமுழுக்க குளிர்சாதன வசதி கொண்டது. இந்த ரயில் இரண்டு பெட்டிகளில் சொகுசு இருக்கை வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் கான்பூர் மற்றும் அலகாபாத் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும். இந்த ரயில் மேட் இன் இந்தியா ரயில் ஆகும். இந்த ரயிலை குடியரசு தின பரிசாக மக்களுக்கு வழங்குகிறோம் எனக் கூறியிருந்தார்.
இந்த ரயிலை பிரதமர் நரேந்திர மோடி வரும் 15-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி வைக்கிறார். 16 பெட்டிகளை கொண்ட இந்த ரயில் டெல்லி டூ வாரணாசி இடையே இயங்கவுள்ளது. இந்தநிலையில் 'வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்' ரயில் கட்டண விவரங்கள் வெளியாகியுள்ளன.
அதில், டெல்லியில் இருந்து வாரணாசிக்கு இருக்கை வசதிக்கு (Chair Car) ரூ. 1,850 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதேசமயம் எக்ஸிகியூட்டிவ் வகுப்பிற்கு (Executive Class) ரூ. 3520 டிக்கெட் கட்டணம் ஆகும். மறு மார்க்கத்தில் வாரணாசியில் இருந்து டெல்லிக்கு இருக்கை வசதிக்கு ரூ. 1795 கட்டணமும், எக்ஸிகியூட்டிவ் வகுப்புக்கு ரூ. 3470 ரூபாயும் கட்டணமும் வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.