வைகாசி விசாகம் முருகப்பெருமான் உதித்த நட்சத்திரம். வைகாசி மாதம் வரும் விசாக நாளன்று முருகனை வழிபடுவது இந்து மதத்தில் மிகவும் பிரபலமானது. காளிதாசர் இயற்றிய குமார சம்பவம் என்ற நூலில் முருகன் கார்த்திகை பெண்களுக்கு மகனாக அவதரித்தது தொடர்பான குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. வைகாசி மாத முழு நிலவு நாளன்று ஆறு குழந்தைகளாக அவதரித்த முருகன், ஆறுமுகன் என்று பெயர் பெற்றார்.
பல்வேறு பெருமைகள் பெற்ற வைகாசி மாதம் இறை வழிபாடுகளுக்கு உகந்த மாதமாக உள்ளது. சோமாஸ் கந்த தத்துவத்தில், சிவ பெருமான் தாணு (மரமாக) வாக இருப்பதாகவும், அன்னை பராசக்தி கொடியாக (அபர்ணா) இருப்பதாகவும், முருகப் பெருமான் விசாகமாக (கீழ் கன்றாக) இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
முருகனின் அறுபடை வீடுகளிலும், வைகாசி விசாகம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. விசாகம் குருவிற்குரிய நட்சத்திரம் என்பதால், குருவிற்கு உரிய தலமான திருச்செந்தூரில் வைகாசி விசாகம் பத்து நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
மரணபயம் போக்கும் வைகாசி விசாக வழிபாடு
தென்திசையின் அதிபதியும், மரண தேவனுமான எம தர்மராஜனுக்கு உரிய நாள் வைகாசி விசாகம். வைகாசி விசாக நாளன்று எம தர்மராஜனை வழிபட்டால், நீள் ஆயுள் சித்திக்கும். வைகாசி விசாக நாளன்று சுவாமிமலை முருகனை வழிபட்டு ஆற்றல் பெற்றார் தேவர்களின் தலைவர் இந்திரன் என்று புராணங்கள் சொல்கின்றன.
சிவனின் அம்சம் பொருந்திய சக்தியை தவிர வேறு எந்த சக்தியாலும் அழிவு வரக்கூடாது என்று சிவபெருமானிடம் சூரபத்மன் மற்றும் அவனது சகோதரர்கள் வரம் பெற்றிருந்தனர். வரத்தால் அகங்காரம் கொண்ட அவர்கள் தேவர்களை அடிமைகளாக நடத்தினார்கள். இதில் பிரம்மனுக்கும் விலக்கில்லை. சிவனின் வரம் என்ற கவசம் இருந்த நிலையில் யாராலும் ஒன்றும் செய்ய முடியாத அவல நிலை பல காலம் தொடர்ந்தது.
சூரபத்மன் மற்றும் அவனது சகோதரர்களின் கொடுமைகளில் இருந்து தங்களை விடுபட வைக்க வேண்டும் என தேவர்கள் சிவபெருமானை நோக்கி தவம் இருந்தனர். தவத்திற்கு எந்த பலனும் கிடைக்காத நிலையில், விஷ்ண்வை அணுகி ஆலோசனை கேட்டனர்.
தேவர்களின் அவலநிலையைக் கண்ட விஷ்ணு, சிவபெருமானின் அம்சத்தில் உருவாகும் குமாரனால் தான் சூரபத்மனுக்கு அழிவு நேரும் என்பதை சொல்லிவிட்டு, யோகியான சிவனுக்கு எப்படி குழந்தை பிறக்கும் என்ற ரகசியத்தையும் சொல்லித் தந்தார். இமவான் மகளான பார்வதி தேவியின் மீது சிவபெருமானுக்கு மையல் வரும் வகையில், மன்மதனை கொண்டு காம பாணம் தொடுக்கச் சொல்வது சரியான உத்தி என்ற விஷ்ணுவின் யோசனைப்படி, பிரம்மதேவர் மன்மதனை அழைத்து, சிவபெருமான் மீது காதல் அம்பு தொடுக்க வேண்டிக் கொண்டார்.
நெருப்பே வடிவான சிவனின் கோபத்தை நினைத்து மன்மதன் பயப்பட்டான். ஆனால், வேறுவழியில்லாமல் பிரம்மனின் கட்டளையை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில், யோக நிலையில் இருந்த சிவனின் மீது தனது மன்மத பாணத்தை தொடுத்த மன்மதனை ஈஸ்வரன் எரித்து சாம்பலாக்கிவிட்டார்.
நிலைமையை கண்டு பயந்த தேவர்கள் அனைவர்களும் ஒன்றுகூடி சிவபெருமானை நோக்கிச் சென்று வேண்டுகோள் விடுத்தனர். இமவான் மகளான பார்வதியை சிவன் திருமணம் செய்துக் கொண்டார். சூரபத்ம அசுரர்களை அழிக்க, சிவனுக்கு நிகரான சிவபுத்திரனை அருளி தங்களை காத்தருள வேண்டும் என்று வேண்டினார்கள்.
சிவபெருமான், தனது ஆறு திருமுகங்களான, ஈசானம், தத் புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம், அதோமுகங்களுடன் காட்சியளித்தார். அப்போது அந்த ஆறு முகங்களில் இருந்தும் தலா ஒரு தீப்பொறி தோன்றி மொத்தம் ஆறு தீப்பொறிகள் வெளியாகின. அந்த ஆறு தீப்பொறிகளும் கங்கையில் கொண்டு சேர்க்க, கங்கை, அந்த ஆறு தீப்பொறிகளையும், சரவணப் பொய்கையில் கொண்டு போய் சேர்ப்பித்தது.
சிவனின் அறுமுகங்களில் இருந்து வெளிப்பட்ட தீப்பொறிகள் ஆறும் ஆறு அழகிய திருவுருவம் குழந்தைகளாக மாற, ஆறு குழந்தைகளையும் தாமரை மலர்கள் தாங்கின. இந்த அற்புதமான நாள் தான் வைகாசி விசாகம். அறுமுகன் சிவகுமரன் அவதரித்த முழு நிலவு நாளன்று முருகனை வணங்கி வாழ்வில் வளம் பெறுவோம்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது)
மேலும் படிக்க | சாகாவரம் பெற்றாலும் அகங்காரமே எமனாகும்! விஷ்ணுவின் நரசிம்மர் ஜெயந்தி தினம் மே 21!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ