வரலாற்றை மாற்றிய தென்னாப்பிரிக்கா... முதல்முறையாக இறுதிப்போட்டியில் - கிடைக்குமா கோப்பை?

SA vs AFG Match Highlights: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடரின் அரையிறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.

Written by - Sudharsan G | Last Updated : Jun 27, 2024, 10:21 AM IST
  • ஐசிசி தொடர்களில் இதுதான் தென்னாப்பிரிக்காவின் முதல் இறுதிப்போட்டியாகும்.
  • மற்றொரு அரையிறுதியில் இந்தியா - இங்கிலாந்து இன்று மோதல்
  • இறுதிப்போட்டி ஜூன் 29ஆம் தேதி நடைபெறுகிறது.
வரலாற்றை மாற்றிய தென்னாப்பிரிக்கா... முதல்முறையாக இறுதிப்போட்டியில் - கிடைக்குமா கோப்பை? title=

SA vs AFG Match Highlights: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடரின் அரையிறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. தென்னாப்பிரிக்கா அணி ஐசிசி தொடர் வரலாற்றில் முதல்முறையாக அரையிறுதிப் போட்டியில் வெற்றிபெற்றுள்ளது. அதன்மூலம், முதல்முறையாக ஐசிசி தொடர் ஒன்றின் இறுதிப்போட்டியில் முதன்முதலாக விளையாட உள்ளது.

ஐசிசி டி20 உலகக் கோப்பையின் முதல் அரையிறுதிப் போட்டி டிரினிடாட் & டொபாகோ நாட்டின் சான் பெர்னாண்டோ நகரில் உள்ள பிரையன் லாரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் தென்னாப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை மேற்கொண்டன. இந்திய நேரப்படி இன்று காலை 6 மணிக்கு போட்டி தொடங்கிய நிலையில், போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களையும் சேர்த்தே 20.4 ஓவர்கள்தான் வீசப்பட்டன. அதாவது வெறும் 124 பந்துகளே மொத்தம் வீசப்பட்டன. 

தென்னாப்பிரிக்கா பக்கம் வீசிய காற்று...

பலரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த போட்டி தென்னாப்பிரிக்காவின் பக்கம் எளிதாக சென்றுவிட்டது. ஆப்கானிஸ்தான் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. ஆனால், இந்த முடிவு அவர்களுக்கு பெரிய தலைவலியாய் மாறியது. மார்கோ யான்சன் தொடக்கக் கட்ட ஓவர்களிலும், ஷம்ஸி பின்பகுதிகளிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை எடுக்க 11.5 ஓவர்களுக்கு ஆப்கானிஸ்தான் 56 ரன்கள் எடுத்து ஆல்-அவுட்டானது.

மேலும் படிக்க | ஐசிசி தரவரிசையில் நம்பர் 1 இடத்தை இழந்த சூர்யகுமார் யாதவ்! முதல் இடத்தில் யார் தெரியுமா?

ஆப்கானிஸ்தான் அணிக்கு அஸ்மதுல்லா ஓமர்ஸாய் 10 ரன்களை எடுத்ததுதான் அதிகபட்ச தனிநபர் ரன்களானது. தென்னாப்பிரிக்கா பந்துவீச்சில் மார்கோ யான்சன், ஷம்ஸி தலா 3 விக்கெட்டுகளையும், ரபாடா மற்றும் நோர்க்கியா தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பெரிய அணிகளை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதிபெற்றிருந்த நிலையில், இப்போட்டியில் போராடாமல் தென்னாப்பிரிக்காவிடம் சரணடைந்தது பெரிய ஏமாற்றத்தை அளித்தது.

யான்சன் ஆட்ட நாயகன்

பந்துவீச்சிலும் ஆப்கானிஸ்தானால் பெரிதாக ஒன்றும் செய்ய முடிவில்லை. வெறும் 8.5 ஓவர்களில் தென்னாப்பிரிக்கா 1 விக்கெட் இழப்பிற்கு இலக்கை அடைந்தது. அதிகபட்சமாக ரீசா ஹெண்ட்ரிக்ஸ் 29 ரன்களையும், மார்க்ரம் 23 ரன்களை எடுத்தனர். ஃபசல் ஹக் ஃபரூக்கி டி காக்கை 5 ரன்களில் வெளியேற்றியிருந்தார். மேலும் ஆட்ட நாயகன் விருதை தென்னாப்பிரிக்கா பந்துவீச்சாளர் மார்கோ யான்சன் பெற்றார்.

வரலாற்றை மாற்றியது...

முன்னர் கூறியது போல், ஐசிசி தொடர்களில் முதல்முறையாக அரையிறுதியில் வெற்றி, முதல்முறையாக இறுதிப்போட்டிக்கும் சென்றுள்ளது தென்னாப்பிரிக்கா அணி. 1992ஆம் ஆண்டில் இருந்து ஐசிசி தொடர்களில் விளையாடி வரும் தென்னாப்பிரிக்கா அணி இந்த போட்டியையும் சேர்த்து 11 முறை ஐசிசி தொடரின் நாக் அவுட் சுற்றுக்கு தகுதிபெற்றிருக்கிறது. 

அதில் 2015ஆம் ஆண்டு ஐசிசி உலகக் கோப்பை காலிறுதி போட்டியிலும், இன்றைய டி20 உலகக் கோப்பை 2024 அரையிறுதிப் போட்டியிலுமே வெற்றி பெற்றிருக்கிறது. 1999 ஐசிசி உலகக் கோப்பை தொடரின் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டி சமனில் முடிய முந்தைய சுற்றின் புள்ளிகளின் அடிப்படையில் அப்போது ஆஸ்திரேலியா இறுதிப்போட்டிக்குச் சென்றது.

இறுதிப்போட்டி

மீதம் உள்ள 8 போட்டிகளிலும் தென்னாப்பிரிக்கா அணி தோல்வியையே சந்தித்திருந்தது. அதனை இம்முறை முறியடித்து பைனலுக்குள் காலடி எடுத்துவைத்துள்ளது. இன்று இரவு 8 மணிக்கு இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது அரையிறுதியில் வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவுடன் மோதும். இந்திய நேரப்படி ஜூன் 29ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு இறுதிப்போட்டி நடைபெறும்.

மேலும் படிக்க | ஒரு பார்ட்டிக்கு வர 2 லட்சம்! உலக கோப்பையின் போது பாகிஸ்தான் வீரர்கள் குதூகலம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News