Taskin Ahmed Overslept: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் (ICC T20 World Cup 2024) அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகளில் நடைபெற்றது. ஜூன் 2ஆம் தேதி தொடங்கிய அந்த தொடர் ஜூன் 28ஆம் தேதி வரை நடைபெற்றது. 20 அணிகள் பங்கேற்ற குரூப் சுற்றில் இருந்து 8 அணிகள் அடுத்த சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்றன. பின்னர் அதில் இருந்து 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றன. ஜூன் 28ஆம் தேதி அன்று இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இறுதிப்போட்டியில் மோதின. இதில் இரண்டாவது முறையாக இந்தியா டி20 உலகக் கோப்பையை கைப்பற்றியது.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி (Team India) தொடர் முழுவதும் 8 போட்டிகளில் விளையாடி ஒரு தோல்வியை கூட பெறாமல் அனைத்தையும் வென்று கோப்பையையும் வென்றது. கனடா அணிக்கு எதிரான போட்டி மட்டும் மழையால் முழுவதுமாக ரத்தானது. அந்த வகையில், தொடரில் ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் டி20 உலகக் கோப்பையை வென்ற அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றது. டி20 உலகக் கோப்பையை வென்ற கையோடு இந்திய அணியின் மூத்த வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவிந்திர ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.
இந்திய அணி மீதான குற்றச்சாட்டு
மேலும் புதிய வீரர்கள் அடங்கிய இந்திய அணி தொடர்ந்து சர்வதேச டி20 தொடர்களில் வலம் வரும் எனலாம். இந்த டி20 உலகக் கோப்பை தொடரின்போது இந்திய அணியின் மீது பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. இந்திய அணி அனைத்து போட்டிகளையும் காலையில்தான் விளையாடுகின்றன என்றும் இதன்மூலம் ஐசிசி இந்திய அணிக்கு சாதகமாக நடக்கிறது என்றும் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. இந்திய அணி பந்தை சேதப்படுத்துகிறது என்றெல்லாம் குற்றச்சாட்டுகள் வந்தன. இறுதிப்போட்டியில் திருப்புமுனையாக அமைந்த டேவிட் மில்லரை அவுட்டாக்கிய சூர்யகுமார் யாதவின் கேட்ச் குறித்த சர்ச்சைகளும் தொடர்ந்து வருகின்றன. ஆனால், இவை அனைத்தும் குற்றச்சாட்டுகளாகவே எஞ்சி நிற்கின்றன.
மேலும் படிக்க | IND vs ZIM: ஜிம்பாப்வே தொடரில் இருந்து ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் நீக்கம்!
அந்த வங்கதேச வீரர்...
இப்படி இந்திய அணி மீது மட்டுமின்றி பல அணிகளின் மீதும் பல்வேறு காரணங்களுக்காக குற்றச்சாட்டுகள் இருந்தன. பாகிஸ்தான் அணியின் படுதோல்வி ஆகியவை தொடர் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டது. அந்த வகையில், தற்போது வங்கதேச அணி (Team Bangladesh) வீரர் ஒருவர் மீது பகிரங்க குற்றச்சாட்டு ஒன்று வைக்கப்பட்டுள்ளது கிரிக்கெட் உலகில் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் இந்தியா - வங்கதேசம் போட்டி மிகுந்த விறுவிறுப்புடன் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, அதன் அரையிறுதி வாய்ப்பை ஏறத்தாழ உறுதிசெய்திருந்தது. வங்கதேச அணிக்கு இந்த தொடரில் பேட்டிங்கை விட பந்துவீச்சே பலமாக இருந்தது. குறிப்பாக, பவர்பிளே பந்துவீச்சு.
அசந்து தூங்கிய டஸ்கின் அகமது
அதனால்தான், அந்த போட்டியில் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தாலும், டாஸ் வென்று வங்கதேச கேப்டன் நஜ்முல் ஹூசைன் ஷாண்டோ பந்துவீச்சை தேர்வு செய்திருந்தார். ஆனால், அந்த போட்டியில் வங்கதேச அணியின் முக்கிய வேகப்பந்துவீச்சாளரான டஸ்கின் அகமது (Taskin Ahmed) விளையாடவில்லை. அன்று வெறும் இரண்டு வேகப்பந்துவீச்சாளர் உடன்தான் வங்கதேசம் விளையாடியது. டஸ்கின் அகமதிற்கு பதில் சுழற்பந்துவீச்சாளர் ஜாக்கர் அலி சேர்க்கப்பட்டிருந்தார். இதற்கான காரணம் அப்போது சரியாக தெரியாத நிலையில் அதுகுறித்த தகவல் இப்போது வெளியாகி உள்ளது.
அதாவது, போட்டி அங்கு உள்ளூர் நேரப்படி காலையில் நடைபெற்றதால் டஸ்கின் அகமது இந்தியா போட்டி அன்று சரியான நேரத்திற்கு எழுந்திருக்கவில்லை எனவும், அவர் தூங்கிக்கொண்டிருந்ததால் அணி நிர்வாகிகளால் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, அவரால் சரியான நேரத்தில் வீரர்களின் பேருந்தை பிடிக்க முடியாமல் போனதாகவும், தாமதமாகவே அவர் அணியுடன் மைதானத்தில் இணைந்தார் எனவும் தகவல்கள் கூறுகின்றன.
பயிற்சியாளருடன் பிரச்னையா...?
இருப்பினும் அவர் அணியினரிடம் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டதாகவும், அணியின் பயிற்சியாளரே அவர் அன்றைய போட்டியில் விளையாட வேண்டாம் என முடிவெடுத்ததாகவும் கூறப்படுகிறது. டஸ்கின் அகமது ஆப்கானிஸ்தான் அணியிடையேயான அடுத்த போட்டியில் விளையாடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே, பயிற்சியாளர் - வீரர்கள் இடையே எவ்வித பிரச்னையும் இல்லை என தெரிகிறது. இலங்கை சேர்ந்த முன்னாள் வீரர் சண்டிகா ஹத்துருசிங்க தற்போது வங்கதேச அணியின் தலைமை பயிற்சியாளர் ஆவார்.
மேலும் படிக்க | தோனி, சச்சின், கோலியை விட அதிக சொத்து மதிப்பு கொண்ட இந்திய வீரர் யார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ