புது டெல்லி: நாடு முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பல சர்வதேச விளையாட்டு போட்டிகள் மற்றும் உள்ளூர் போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டு வருகின்றன. தற்போது அந்த வரிசையில் தற்போது டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரும் இடம் பெறப்போவதாக கூறப்படுகிறது. அதுக்குறித்து ஐ.சி.சி தலைமையில் நடைபெற்ற நிர்வாகிகள் குழு கூட்டத்தில் டி-20 உலக கோப்பை தொடரை தாமதமாக நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மற்ற எல்லா விளையாட்டுகளையும் போலவே கிரிக்கெட் நடவடிக்கைகளையும் நிறுத்தி வைத்துள்ளது. கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் தொடங்கும் போது, அப்பொழுது மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்களையும் எதிர்கால நடவடிக்கைகளையும் உருவாக்கும் பணியில் ஐ.சி.சி ஈடுபட்டுள்ளது.
இதன் முடிவாக 2023 ஆம் ஆண்டு வரையிலான சர்வதேச கிரிக்கெட் போட்டி அட்டவணையை மாற்றியமைக்க ஐசிசி முடிவெடுத்துள்ளது. அதோடு இந்தாண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை தொடரும் ஒத்திவைக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதேநேரத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பைப் பொறுத்தவரை டெஸ்ட் கிரிக்கெட் இந்திய கிரிக்கெட்டில் மிக முக்கியமானது என்பதை பிசிசிஐ தெளிவுபடுத்தி உள்ளது.
இந்த கூட்டத்தின் போது முன்மொழியப்பட்ட பல்வேறு விருப்பங்களில், டி 20 உலகக் கோப்பையை திட்டமிடுவதைப் பொறுத்தவரை, பெரும்பான்மையான உறுப்பினர்கள் மூன்று முக்கியமான விருப்பங்களை முன்வைத்தது.
அதில் முதலாவது அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடத்துவது. இரண்டாவது அடுத்த ஆண்டு பிப்ரவரி-மார்ச் மாதங்களில் நடத்துவது. மூன்றாவது மற்றும் கடைசி விருப்பம் போட்டியை 2022 ஆம் ஆண்டு வரை தள்ளி வைப்பது எனக்கோரிக்கைகள் வைக்கப்பட்டது.
பெரும்பாலும் வாரிய உறுப்பினர்கள் பிப்ரவரி-மார்ச் மாதங்களில் டி 20 உலகக் கோப்பையை நடத்துவதை நோக்கி தான் இருக்கும் எனத் தெரிகிறது.
கூட்டத்தில் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை, ஐ.சி.சி தொடர்ந்து நிலைமையை மறுபரிசீலனை செய்யும்,. ஆனால் டி 20 உலகக் கோப்பை பிப்ரவரி-மார்ச் 2021 க்கு மாற்றப்படலாம் என்பது தெளிவாகிறது.