IPL 2023: லக்னோவை வேட்டையாடுமா சிஎஸ்கே... பிளேயிங் லெவனில் மாற்றம் தோனி - பிளான் என்ன?

IPL 2023 LSG vs CSK: ஐபிஎல் தொடரில், லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ விளையாடும் லீக் போட்டி இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்குகிறது.

Written by - Sudharsan G | Last Updated : May 3, 2023, 01:13 PM IST
  • லக்னோ அணியில் ராகுல் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகல்.
  • குர்னால் பாண்டியா கேப்டனாக செயல்பட வாய்ப்பு.
IPL 2023: லக்னோவை வேட்டையாடுமா சிஎஸ்கே... பிளேயிங் லெவனில் மாற்றம் தோனி - பிளான் என்ன? title=

IPL 2023 LSG vs CSK: நடப்பு ஐபிஎல் தொடர் தற்போது சுவாரஸ்யமான கட்டத்தை எட்டியுள்ளது. எந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என கணிக்க முடியாமல் கிரிக்கெட் வல்லுநர்களே திணறும் அளவிற்கு தற்போது 10 அணிகளும் கடுமையாக போட்டிப்போட்டுக்கொள்கின்றன. 

குஜராத் அணி 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தாலும், லக்னோ, ராஜஸ்தான், சென்னை, பஞ்சாப், பெங்களூரு ஆகிய அணிகள் 10 புள்ளிகளுடன் முறையே அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இதனால், ஒவ்வொரு போட்டியில் வெற்றி பெறுவது மட்டுமின்றி, அதிக ரன்ரேட்டை வைத்திருப்பதும் தற்போது அவசியமாகியுள்ளது. 

சொந்த மண்ணில் வேட்டை...

இந்த சூழலில், இன்று நடைபெறும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணி போட்டியும் மிகுந்த கவனத்தை பெற்றுள்ளது. லக்னோ அணி நேற்று முன்தினம் நடந்த போட்டியில், பெங்களூரு உடன் படுதோல்வி அடைந்தாலும் அந்த அணியின் மீண்டு வந்து தாக்குவதில் பெயர் பெற்றதாகும். இதே தொடரில், சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை அணி, லக்னோவை வென்றிருந்தது. எனவே, சென்னை அணியை தனது சொந்த மண்ணில் வேட்டையாட லக்னோ வெறிகொண்டு காத்திருக்கலாம். 

கேப்டன் குர்னால்

லக்னோ - பெங்களூரு போட்டிக்கு பிறகு களத்தில் நடைபெற்ற சர்ச்சைகள் தற்போது கிரிக்கெட் உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் வேளையில், அதே மைதானத்தில் சென்னை அணி, லக்னோவை சந்திக்க உள்ளது நினைவுக்கூரத்தக்கது. கடந்த போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக கேஎல் ராகுல் இன்றைய போட்டியில் விளையாட மாட்டார். அவருக்கு பதில், குர்னால் பாண்டியா கேப்டனாக செயல்படுவார். 

மேலும் படிக்க | அணியை தனியாளாக தாங்கும் ஷமி... அவரையே போட்டுத்தாக்கும் மனைவி - உச்சநீதிமன்றத்தில் 'நறுக்' மனு!

முரட்டு ஃபார்மில் லக்னோ

மேலும், லக்னோ அணியின் வேகப்பந்துவீச்சாளர் மார்க் வுட்டுக்கு விரைவில் குழந்தை பிறக்க உள்ளது. இதனால், அவர் விரைவில் இங்கிலாந்து செல்ல நேரிடும். இருப்பினும், அவர் லக்னோவின் அடுத்த இரண்டு போட்டிகளில் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இன்றைய போட்டியில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு மார்க் வுட் பெரிய தலைவலியாக அமைய வாய்ப்புள்ளது. பேட்டர்கள், பந்துவீச்சாளர்கள், ஆல்-ரவுண்டர்கள் என லக்னோ முரட்டு பலமான அணியாக செயல்பட்டு வருகிறது. 

மீண்டெழுமா சிஎஸ்கே?

மறுப்புறம் சென்னை அணி முதற்கட்ட லீக் ஆட்டங்களில் நன்றாக விளையாடியிருந்தாலும், கடைசி 2 போட்டிகளில் தோல்வியடைந்தது. அதுவும் சென்னை சேப்பாகத்தில் நடைபெற்ற கடந்த போட்டியில், 200 ரன்களை குவித்தும், அந்த அணியால் பஞ்சாப் தனது பந்துவீச்சால் கட்டுப்படுத்த இயலாமல் தோல்வியை தழுவியது. இந்த 2 போட்டிகளில் பெற்ற பாடத்தை மனதில் வைத்து, இந்த போட்டியை வெல்லும் முனைப்பில் சிஎஸ்கே இருக்கும். 

ருதுராஜ், தூபே மைல்கல்கள்

இந்த போட்டி, சிஎஸ்கேவின் ஆஸ்தான ஓப்பனர் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு 100ஆவது டி20 போட்டியாகும். அவர் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக இதுவரை 45 போட்டிகளில் விளையாடி, 12 அரைசதம், 1 சதம் என 1561 ரன்களை குவித்துள்ளார். சிஎஸ்கே வீரர் தூபே இன்னும் 48 ரன்களை எடுப்பதன் மூலம், ஐபிஎல் தொடரில் 1000 ரன்களை கடப்பார்.

சாண்டனருக்கு வாய்ப்பு?

பந்துவீச்சின்போது, பவர்பிளேவில் அதிக ரன்களை கொடுப்பது, ராயுடு, மொயீன் அலியின் தொடர் சொதப்பல் பேட்டிங் ஆகியவை சிஎஸ்கே அணிக்கு இந்த தொடரில் பிரச்னையாக அமைந்துள்ளது. இதனால், இன்றைய ஆடுகளத்திற்கு ஏற்ற வகையில் பிளேயிங் லெவனில் மாற்றத்தை கொண்டுவருவார் என கூறப்படுகிறது. குறிப்பாக, தீக்ஷனா தொடர்ந்து ரன்களை வாரி வழங்கும் வேளையில் மீண்டும் மிட்செல் சாண்டனருக்கு வாய்ப்பு வழங்குவது அணிக்கு பயனளிக்கலாம்.

லக்னோ - சென்னை போட்டி, உத்தரப் பிரதேசத்தின் லக்னோவில் உள்ள எக்னா மைதானத்தில் நடைபெறுகிறது. இன்றைய பிட்ச் பேட்டிங், பந்துவீச்சு இரண்டிற்கும் சாதகமாக இருக்கும் கூறப்பட்டது. இங்கு நடைபெற்ற கடைசி இரண்டு போட்டிகளில் முதல் ஓவரில் குறைவான ரன்களே அடிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, 5இல் மூன்று போட்டிகளில் முதலில் விளையாடும் அணியே இங்கு வெற்றி பெறுகிறது. எனவே, டாஸை வெல்வது முக்கியமான ஒன்றாகும். 

பிளேயிங் லெவன் (கணிப்பு)

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: கைல் மேயர்ஸ், மனன் வோஹ்ரா/பிரேராக் மன்கட், ஆயுஷ் படோனி, தீபக் ஹூடா, க்ருனல் பாண்டியா (கேப்டன்), மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன், கிருஷ்ணப்பா கௌதம், அவேஷ் கான்/யாஷ் தாக்கூர், ரவி பிஷ்னோய், அமித் மிஸ்ரா.

சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, மொயீன் அலி, அம்பதி ராயுடு, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ். தோனி (கேப்டன்), மதீஷா பத்திரனா, துஷார் தேஷ்பாண்டே, மஹீஷ் தீக்ஷனா/மிட்செல் சான்ட்னர்.

மேலும் படிக்க | என்ன சீண்டுனா டபுளா கிடைக்கும் காம்பீர்: விராட் கோலியின் பஞ்ச்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News