IPL 2023: பயம் காட்டிய ரஷித் கான்... மும்பை அணி போராடி வெற்றி - கலக்கத்தில் ஆர்சிபி!

IPL 2023 MI vs GT: ஐபிஎல் லீக் போட்டியில், குஜராத் அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மூன்றாம் இடத்திற்குச் சென்று, பிளேஆப் சுற்று வாய்ப்பை தக்கவைத்துள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : May 12, 2023, 11:53 PM IST
  • சூர்யகுமார் யாதவ் 103 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
  • ரஷித் கான் 32 பந்துகளில் 79 ரன்கள் குவித்து மிரட்டினார்.
  • ரஷித் கான் பந்துவீச்சிலும் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.
IPL 2023: பயம் காட்டிய ரஷித் கான்... மும்பை அணி போராடி வெற்றி - கலக்கத்தில் ஆர்சிபி! title=

IPL 2023 MI vs GT: மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான இன்றைய லீக் போட்டி மிகவும் பரபரப்பாக நடைபெற்றது. லீக் சுற்று நிறைவடைய உள்ள சூழலில், இந்த போட்டி மிக முக்கியமான ஒன்றாக இருந்தது. குறிப்பாக, இந்த அணிகளுக்கு மட்டுமில்லாமல் பிளே ஆப் ரேஸில் உள்ள ராஜஸ்தான், லக்னோ, பெங்களூரு, பஞ்சாப், கொல்கத்தா உள்ளிட்ட அணிகளுக்கும் இந்த போட்டி முக்கியமான ஒன்றாக கருதப்பட்டது. 

ரோஹித் ஆறுதல் 

போட்டியில் டாஸ் வென்ற குஜராத் கேப்டன் ஹர்திக் பந்துவீச்சை தேர்வு செய்தார். ஆனால், அவரின் கணக்கு பொய்த்துப்போனது. மும்பை அணியின் ஓப்பனிங் பேட்டர்களான ரோஹித் சர்மா - இஷான் கிஷன் ஜோடி பவர்பிளே ஓவர்களில் ஷமி, மோகித் ஷர்மா, ரஷித் கான், நூர் அகமது என அணியின் முன்னணி பந்துவீச்சாளர்களை அடித்து நொறுக்கி 61 ரன்களை குவித்தது. 

இருப்பினும், பவர்பிளே முடிந்த அடுத்த பந்திலேயே ரஷித் கான் பந்துவீச்சில் ரோஹித் சர்மா 29(18) ரன்களில் ஆட்டமிழந்தார். நல்ல டச்சில் இருந்த ரோஹித் இப்போட்டியில் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களை அடித்திருந்தார். மூன்றாவது வீரராக வந்த சூர்யகுமார் யாதவ் ஆரம்பத்தில் இருந்தே அதிரடியை தொடங்கிவிட்டார் எனலாம். 

சூர்யகுமார் - விஷ்ணு வினோத்

அடுத்து, ரோஹித் அவுட்டான அதே ஓவரில் இஷான் கிஷனும் 31(20) ரன்களில் ஆட்டமிழந்தார். அதில், 4 பவுண்டரிகள், 1 சிக்ஸர் அடக்கம். தொடர்ந்து, நேஹல் வதேரா 15 ரன்களில் ஆட்டமிழக்க, அதிரடி காட்டி வந்த சூர்யகுமாருடன், விஷ்ணு வினோத் இணைந்துகொண்டார். வழக்கம்போல், 360 கோணத்திலும் பந்துகளை பறக்கவிட்டார், சூர்யகுமார். ஷமி, அல்ஸாரி ஜோசப், மோகித் சர்மா வேகப்பந்துவீச்சாளர்களின் நிலைமை படுமோசமாக இருந்தது. இந்த ஜோடி சுமார் 65 ரன்களை எடுத்தபோது அதிரடியாக விளையாடி வந்த விஷ்ணு வினோத் 30(20) ரன்களில் ஆட்டமிழந்தார். இவர் 2189 நாள்களுக்கு பின் ஐபிஎல் தொடரில் பேட்டிங் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கடைசி 3 ஓவர்கள் வெறியாட்டம்

தொடர்ந்து, டிம் டேவிட் 5 ரன்களில் ரஷித் கான் பந்துவீச்சில் நடையைக்கட்டினார். கிரீன் 18ஆவது ஓவரில் களமிறங்கினார். இருப்பினும் அடுத்த 3 ஓவர்களில் அவர் 3 பந்துகளை மட்டுமே விளையாடினார். மீதம் இருந்த 27 பந்துகளையும் சூர்யகுமார் யாதவ் கவனித்துக்கொண்டார். சூர்யகுமார் அந்த 27 பந்துகளில் மட்டும் 51 ரன்களை எடுத்தது குறிப்பிடத்தக்கது. இதனால், மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 218 ரன்களை எடுத்தது. சூர்யகுமார் 49 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகள் என 103 ரன்களை எடுத்தார். இதுவே, சூர்யகுமார் யாதவின் முதல் ஐபிஎல் சதமாகும். குஜராத் பந்துவீச்சில் ரஷித் கான் 4 விக்கெட்டுகளையும், மோகித் சர்மா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். 

மேலும் படிக்க | IPL 2023: 'என்னை ஓட வைக்காதீர்கள்...' தோனியின் கண்டீஷனுக்கு காரணம் என்ன?

டாப் - ஆர்டர் காலி 

இதயைடுத்து, விளையாடிய குஜராத் அணிக்கு தொடக்கம் சரிவர அமையவில்லை. சாஹா 2, பாண்டியா 4, கில் 6 என பவர்பிளே ஓவர்களில் டாப்-ஆர்டர் பேட்டர்கள் மூவரும் ஆட்டமிழந்தனர். இதனால், 6 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து குஜராத் 48 ரன்களை மட்டுமே எடுத்தது. சற்றுநேரம் நிலைத்து விளையாடிய விஜய் சங்கர், பவர்பிளே முடிந்த முதல் பந்தில் பியூஷ் சாவ்லா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவர் 15 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 29 ரன்களை எடுத்திருந்தார்.  அவர் ஆட்டமிழந்த அடுத்த ஓவரில் அபினவ் மனோகரும் 2 ரன்களில் குமார் கார்த்திகேயாவிடம் வீழ்ந்தார்.

ஆறுதல் அளித்த மில்லர்

அப்போது ஜோடி சேர்ந்த மில்லர் - தோவாட்டியா ஆகியோர் அணியை கரைசேர்ப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அதிரடி காட்டி வந்த மில்லர் 12ஆவது ஓவரில் ஆகாஷ் மத்வால் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவர் 26 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகல் என 41 ரன்களை எடுத்திருந்தார். அவர் ஆட்டமிழந்த அடுத்த பந்தில் திவாட்டியா 14 ரன்களில் பியூஷ் சாவ்லாவிடம் வீழ்ந்தார். நூர் அகமது 1 ரன்னில் வெளியேற, 13.2 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்களை எடுத்து குஜராத் திணறியது.

ரஷித் கானின் மிரட்டல் அடி!  

அப்போது அல்ஸாரி ஜோசப், ரஷித் கானுடன் ஜோடி சேர்ந்தார். அல்ஸாரி ஒருபக்கம் துணை நிற்க ரஷித் கான் ருத்ரதாண்டவம் ஆடினார். குமார் கார்த்திகேயா வீசிய 14ஆவது ஓவரில் 13 ரன்கள், பெஹன்டிராப் வீசிய 15ஆவது ஓவரில் 14 ரன்கள், ஜோர்டன் 17ஆவது ஓவரில் 15 ரன்கள், கேம்ரூன் கிரீன் வீசிய 18ஆவது ஓவரில் 13 ரன்கள் என ரஷித் கான் அதிரடியால் ஸ்கோர் உயர்ந்தது. ரஷித் கான் 21 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதில், 16ஆவது ஓவரில் 6 ரன்கள், 19ஆவது 7 ரன்கள் என குறைவாக எடுக்கப்பட்டபோது, அல்ஸாரி ஜோசப் அதிகமாக ஸ்ட்ரைக்கில் இருந்தார். 

88 ரன்கள் பார்ட்னர்ஷிப்

கடைசி ஓவரில் 47 ரன்கள் குஜராத் அணி வெற்றிக்கு தேவைப்பட்டது. ரஷித் கான் அந்த ஓவரில் 3 சிக்ஸர்களை பறக்கவிட்டார். இதன்மூலம், குஜராத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்களை எடுத்தார். இதனால், மும்பை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரஷித் கான் - ஜோசப் ஜோடி 88 ரன்களை எடுத்து, கடைசி வரை விக்கெட்டை விடாமல் இருந்தது. மும்பை பந்துவீச்சில் ஆகாஷ் மத்வால் 3 விக்கெட்டுகளையும், பியூஷ் சாவ்லா, குமார் கார்த்திகேயா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், பெஹன்டிராப் 1 விக்கெட்டையும் எடுத்தார். சூர்யகுமார் யாதவ் ஆட்ட நாயகனாக தேர்வானார்.

கலக்கத்தில் மற்ற அணிகள் 

இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மும்பை 12 போட்டிகளில் விளையாடி 7 வெற்றிகளையும், 5 தோல்விகளையும் பெற்றுள்ளது. குஜராத் அணி 12 போட்டிகளில் 8 வெற்றிகளையும், 4 தோல்விகளையும் பெற்று முதலிடத்தில் நீடிக்கிறது. மும்பையின் வெற்றியால் பெங்களூரு, லக்னோ உள்ளிட்ட அணிகள் பெரும் கலக்கத்தில் இருக்க வாய்ப்புள்ளது. 

மேலும் படிக்க | செம ஃபார்மில் இருக்கிறாங்க...இந்திய அணிக்கு தேர்வு செய்யுங்கள்: சுரேஷ் ரெய்னா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News