இன்றைய கிரிக்கெட் உலகில் வேகமாக வளர்ந்து வரும் ஒரு நாடாக ஆப்கானிஸ்தான் அணி இருந்து வருகிறது. பெரிய பெரிய அணிகள் கூட இவர்களை பார்த்து பயப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டிகளில் யாரும் எதிர்பார்க்காத விதமாக நியூசிலாந்து போன்ற பெரிய அணியை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறியது. இந்த வெற்றியை ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் மிகவும் ஆரவாரத்துடன் கொண்டாடினர். சமீபத்தில் பல இன்னல்களை சந்தித்த ஆப்கானிஸ்தான் அணி பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற அணிகளுக்கு கிரிக்கெட்டில் பயத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், அந்நாட்டில் இருந்து சமீபத்தில் வெளியான செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த செய்தி உண்மையாகும் பட்சத்தில், உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆப்கானிஸ்தான் தலைவர் ஹிபத்துல்லா அகுன்சாடா, அவர்கள் நாட்டில் கிரிக்கெட்டுக்கு படிப்படியாக தடை விதிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும், தற்போது வரை இது குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. அந்நாட்டு அரசை கலைத்துவிட்டு தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றி ஆட்சி செய்து வருகின்றனர். தாலிபான்கள் பொறுப்பேற்றதில் இருந்து அந்நாட்டில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக ஆப்கானிஸ்தானில் இருக்கும் பெண்கள் எந்த ஒரு விளையாட்டு போட்டியிலும் பங்கேற்க அல்லது விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது இதே நிலை ஆண்களுக்கு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. Visegrád 24 என்ற X பக்கத்தில், "ஆப்கானிஸ்தானின் இஸ்லாமிய எமிரேட்ஸின் தலைவர் ஹிபத்துல்லா அகுன்சாடா நாடு முழுவதும் கிரிக்கெட்டுக்கு படிப்படியாக தடை விதிக்கப்போவதாக அறிவித்துள்ளார். கிரிக்கெட் நாட்டில் தீங்கு விளைவிக்கும் மற்றும் இது ஷரியா சட்டத்திற்கு எதிரானது என்று நம்புகிறார்" என்று அந்த பதிவில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆப்கானிஸ்தானில் தற்போது இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. தலைவர் அகுன்சாடாவிற்கும், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டில் அதிக முதலீடு செய்துள்ள அனஸ் ஹக்கானியின் சகோதரர் சிராஜுதீன் ஹக்கானி ஆகியோருக்கும் இடையே பிரச்சனை நிலவி வருகிறது.
The Supreme Leader of the Islamic Emirate of Afghanistan Hibatullah Akhundzada has announced that he will introduce a gradual ban on cricket in the country.
The Taliban cleric believes cricket has harmful influence on the country and is against Sharia law. pic.twitter.com/KyCMwAD259
— Visegrád 24 (@visegrad24) September 11, 2024
ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த பல கிரிக்கெட் வீரர்கள் இந்திய ரசிகர்களுக்கும் பரிட்சயமானவர்கள் தான். ரஷித் கான், முகமது நபி, நவீன்-உல்-ஹக் போன்ற வீரர்கள் ஐபிஎல்லில் விளையாடி வருகின்றனர். மேலும் சர்வதேச போட்டிகளிலும் சிறப்பாக விளையாடுகின்றனர். உலகெங்கிலும் உள்ள பல்வேறு லீக் கிரிக்கெட் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் விளையாடி வருகின்றனர். தற்போது ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் உள்ள நொய்டாவில் நியூசிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாட வந்துள்ளனர். முதல் போட்டி மழையினால் கைவிடப்பட்டது. ஆப்கானிஸ்தானில் பல்வேறு பொழுது போக்கு விஷயங்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், கிரிக்கெட்டும் தடை விதிக்கப்படுமா என்று அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ