நெல்லை மாவட்டம் பொன்னாக்குடி அருகே உள்ள அடைமதிப்பான் குளம் கிராமத்தில் வெங்கடேஸ்வரா என்ற பெயரில் கல்குவாரி அமைந்துள்ளது. இங்கு இரவு நேரத்தில் விதிமுறைகளை மீறி பணிகள் நடைபெற்று வந்ததுள்ளன. நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் கல்குவாரியில் உடைத்து வைக்கப்பட்டிருக்கும் கற்களை லாரி மூலம் எம் சேன்ட் தயாரிக்கும் பகுதிக்கு எடுத்து வரும் முயற்சியில் சுமார் 6 தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். இதனிடையே நேற்று நெல்லை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
இதனால் நள்ளிரவு 12 மணியளவில் குவாரியில் பணிகள் நடைபெற்று வந்தபோது திடீரென பாறைகள் சரிந்து விழுந்துள்ளன. குறிப்பாக மிகப்பெரிய ராட்சத கல் ஒன்று உருண்டு பணியில் இருந்த 3 கிட்டாச்சி ரக இயந்திரங்கள் மற்றும் 2 லாரிகள் மீது விழுந்துள்ளது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர்கள் உள்பட 6 பேர் பாறை இடுக்குகளில் சிக்கி உயிருக்கு போராடினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாளையங்கோட்டை மற்றும் நாங்குநேரி பகுதி தீயணைப்பு துறையினர் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர்.
நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணனும் நேரில் சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டார். ஆனால் இரவு நேரத்தில் மழை பெய்துகொண்டிருந்த சூழலில் சுமார் 300 அடி பள்ளத்தில் சிக்கியிருந்தவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. மேலும் மிகவும் ஆழமாக பாறைகளை பெயர்த்து எடுத்த பகுதியில் விபத்து நிகழ்ந்ததால் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது.
மேலும் படிக்க | கர்நாடக மாநிலத்தின் கல்குவாரியில் பாறை உருண்டு விழுந்து 10 பேர் பலி
இதனால் மீட்பு பணிகளுக்காக ராமேஸ்வரம் ஐ.என்.எஸ். கடற்படை தளத்தில் இருந்து ஹெலிகாப்டர் படையினர் வரவழைக்கப்பட்டனர். லெப்டினன்ட் கமாண்டர் சஞ்சய் தலைமையிலான 4 பேர் கொண்ட மீட்புக்குழுவினர் பாறைக்குள் சிக்கியவர்களை மீட்பது பற்றி ஆலோசித்தனர். ஆனால், அவர்களாலும் மீட்புபணிகளை தொடர முடியாததால் திரும்பி சென்றுவிட்டனர். இருப்பினும் தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினரின் கடின முயற்சியால் ஓட்டுநர்கள் முருகன் மற்றும் விஜய் ஆகியோர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
இருவருக்கும் லேசான காயங்கள் இருந்ததால் அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனிடையே விபத்தில் சிக்கிய மூன்றுபேர் உயிரிழந்ததாக மீட்கப்பட்ட ஓட்டுனர் விஜய் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு நபர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனால் உயிருடன் இருக்கும் அந்த நபரை பத்திரமாக மீட்கும் நோக்கில் சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, நெல்லை சரக டிஐஜி பரவேஷ்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் ஆகியோர் மீட்பு பணிகளை விரைவு படுத்தி வருகின்றனர். விபத்து தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த நெல்லை சரக டிஐஜி பிரவேஷ் குமார், குவாரியில் சிக்கியுள்ள நபரை மீட்க அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கல்குவாரிகள் இரவு நேரத்தில் செயல்படக்கூடாது எனும் விதிமுறைகளை மீறி சிறிய விளக்கு வெளிச்சத்தில் பணிகள் நடைபெற்றதால் விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் படிக்க | மணல் குவாரியை தொடர்ந்து கிரானைட் குவாரிகள் மூட உத்தரவு!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYe