பாஜக-வுடன் எப்போது கூட்டணி வைக்கப்படும் என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவித்த பின்னர் பாஜகவுடன் கூட்டணி குறித்து கலந்தாலோசித்து அறிவிப்போம் என தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், சசிகலா அணி, பன்னீர்செல்வம் அணி அதிமுக இரண்டாக பிளந்தது. ரத்து செய்யப்பட்ட ஆர்கே நகர் இடைத்தேர்தலின் போது, அதிமுக கட்சி மற்றும் சின்னம் முடக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, அதிமுக புரட்சித் தலைவி அம்மா என்ற பெயரில் பன்னீர்செல்வம் அணியும், அதிமுக அம்மா என்ற பெயரில் எதிரணியினரும் செயல்பட்டு வருகின்றனர்.
பேச்சுவார்த்தைக்கு இரு அணிகளின் சார்பிலும், குழுக்கள் அமைக்கப்பட்டதே தவிர, இதுவரை பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. அதேசமயம், இரட்டை இலை கட்சி மற்றும் சின்னம் ஆகியவற்றை மீட்க இரு அணிகளும் முனைப்பு காட்டி வருகின்றன. மேலும், மத்தியில் ஆளும் பாஜக-வுடன் நெருக்கம் காட்டுவதிலும் இரு அணிகளும் போட்டி போட்டு செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நேற்று பன்னீர்செல்வம் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். மேலும் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் பாஜக-வுடன் கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும் என முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இந்த தகவலை தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
We will take a decision on alliance with BJP once local body elections are announced.
— O Panneerselvam (@OfficeOfOPS) May 20, 2017
We mean that only after the announcement of Local body elections we will think about the Alliance with any political party. https://t.co/G1ZeoV3UBT
— O Panneerselvam (@OfficeOfOPS) May 20, 2017
பன்னீர்செல்வத்தை பின்னின்று பாஜக இயக்கி வருகிறது என பரவலாக குற்றம் சாட்டப்பட்டு வந்த நிலையில், பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள இந்த தகவல் முக்கியத்துவம் பெறுகிறது.