TN Cabinet Meeting: தமிழ்நாடு அரசியலில் கடந்த சில மாதங்கள் பரபரப்பான சூழல் நிலவி வந்தது எனலாம். தமிழ்நாடு அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சராக மாற்றப்பட்டார்.
தொடர்ந்து, நிதியமைச்சராக தங்கம் தென்னரசு பொறுப்பேற்றார். இலாக்காக்கள் மாற்றப்பட்ட நிலையில், பால்வளத்துறை அமைச்சராக இருந்த சா.மு. நாசர் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டு மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா தொழில்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.
இதையடுத்து, கடந்த ஜூன் மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில், ஜூன் 14ஆம் தேதி அவரை கைது செய்தது. இருப்பினும், அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சிகிச்சை முடிவடைந்த நிலையில், தற்போது புழல் சிறையில் உள்ளார்.
அந்த வகையில், அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக அவரின் இலாக்காகளை மற்ற அமைச்சர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. மின்சாரத்துறை தங்கம் தென்னரசுக்கும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சு.முத்துசாமிக்கும் கொடுக்கப்பட்டது.
தற்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி இலாக்கா இல்லா அமைச்சராக அமைச்சரவையில் தொடர்கிறார். இருப்பினும், அவர் அமைச்சராக தொடர ஆளுநர் ஆர். என். ரவி ஆட்சேபனை தெரிவித்து வந்தார். ஆனால், மத்திய உள்துறையின் தலையீட்டை அடுத்து, செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக ஆளுநர் ஆர். என். ரவி பிறப்பித்த உத்தரவு, அவராலேயே உடனடியாக நிறுத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. எனவே, செந்தில் பாலாஜி அமைச்சரவையில் இலாக்கா இல்லா அமைச்சகராக தொடர்கிறார்.
செந்தில் பாலாஜியை தொடர்ந்து, அமைச்சர் பொன்முடியின் வீடும் அமலாகத்துறையால் சமீபத்தில் சோதனைக்குள்ளாக்கப்பட்டு பல கோடி சொத்துகள் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டது. உயர்கல்வித்துறை அமைச்சராக இருக்கும் பொன்முடி, முன்னதாக ஆளுநருக்கு எதிராக தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்தார்.
இத்தகைய பரபரப்புக்கு இடையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு திட்டங்கள் தொடர்பாக முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வரும் செப். 17ஆம் தேதி தமிழ்நாடு எங்கும் இல்லத்தரசிகளுக்கு மாதாமாதம் ரூ. 1000 வழங்கும் கலைஞர் உரிமைத்தொகை திட்டம் குறித்து பல்வேறு முடிவுகளும், கலந்தாலோசனைகளும் இக்கூட்டத்தில் நடந்தாக கூறப்படுகிறது.
அந்த வகையில், நடைபெற்ற இந்த அமைச்சரவை கூட்டத்தில், ஆதரவற்ற கைம்பெண் மற்றும் முதியோர் உதவித் தொகையை 1000 ரூபாயில் இருந்து 1,200 ரூபாயாக உயர்த்த தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூட்டத்திற்கு செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். அதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும் என கூறப்படுகிறது.
மேலும் படிக்க | கிளிசரின் போட்டு கண்ணீர் வடித்தவர் எங்கே? குஷ்பூவுக்கு அமைச்சர் கீதா ஜீவன் கேள்வி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ