கட்சித் தலைமை அதிகாரபூர்வமாக அறிவிப்பதற்கு முன்னதாகவே கோவை தொகுதி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் என பாஜக பொதுச் செயலாளர் வானதி ஸ்ரீநிவாசன் தெரிவித்துள்ளார்!
அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாவதற்கு முன்னதாகவே கோவை தொகுதி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் வானதி ஸ்ரீநிவாசன். இதேபோல் எச்.ராஜாவும் செய்தியாளர்கள் சந்திப்பில் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அறிவித்திருக்கிறார்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலை அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இடம்பெற்று எதிர்கொள்கிறது.
அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக-விற்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி தூத்துக்குடி, சிவகங்கை, கோவை, கன்னியாகுமரி, ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் பாஜக போட்டியிடுகின்றது.
பாஜக சார்பில் இத்தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து கட்சி மேலிடம் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை, என்ற போதிலும் தூத்துக்குடியில் தமிழிசை, கன்னியாகுமரியில் பொன். ராதாகிருஷ்ணன், கோவையில் சி. பி. ராதாகிருஷ்ணன், சிவகங்கையில் எச். ராஜா, ராமநாதபுரத்தில் நயினார் நாகேந்திரன் என உத்தேசப் பட்டியல் உலா வந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில், பாஜக பொதுச் செயலாளர் வானதி ஸ்ரீநிவாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் திரு.சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்கள் வெற்றி பெற உழைப்போம்..." எனப் பதிவிட்டுள்ளார். கட்சி அதிகாரபூர்வமாக அறிவிப்பதற்கு முன்னதாகவே கோவை தொகுதி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் என தெரிவித்து ஆதரவு கோரியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இதேபோல் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா அவர்கள், பாஜக வேட்பாளர்கள் இவர்கள்தான் என 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அறிவித்துள்ளார். கட்சித் தலைமை அறிவிப்பதற்கு முன்னதாகவே பாஜக பிரபலங்கள் இப்படி வேட்பாளர் பட்டியலை அறிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.