தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாநிலம் தழுவிய பாதயாத்திரையை மேற்கொண்டிருக்கிறார். என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் தொகுதி வாரியாக மக்களை சந்தித்து வரும் அவருடைய பயணத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராமநாதபுரத்தில் தொடங்கி வைத்தார். பாதயாத்திரை என்று கூறினாலும் அதிகமாக வாகனங்களிலேயே அவர் பயணிப்பது விமர்சனத்துக்குள்ளானது. மேலும், பல இடங்களில் எதிர்பார்த்த அளவுக்கான வரவேற்பு இல்லாததால் அண்ணாமலை கொஞ்சம் அப்செட்டில் இருக்கிறாராம். பாதியில் விட்டால் இன்னும் சர்ச்சையாகும் என்பதால் யாத்திரையை தொடரும் அவர், மாற்றுக் கட்சியினரை பாஜகவுக்குள் கொண்டு வரும் பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறாராம்.
அதில் அதிமுகவுக்கு மட்டும் விதிவிலக்கு. ஏனென்றால் ஏற்கனவே அதிமுகவினரை விமர்சித்து கூட்டணிக்குள் சலசலப்பு எழுந்திருப்பதால் இந்த முடிவை எடுத்திருக்கிறார் அண்ணாமலை. அதேநேரத்தில் அவருடைய முழு டார்க்கெட் திமுகவினர். எந்தெந்த பகுதிகளில் எல்லாம் திமுகவின் முக்கிய புள்ளிகள் அதிருப்தியில் இருக்கிறார்களோ அவர்களை பாஜகவுக்கு கொண்டு வரும் வேலைகள் திரைமறைவில் தொடங்கப்பட்டிருக்கிறதாம். மாநிலம், மாவட்டம், வட்டம் என பிரித்து அதிருப்தியாளர்களை உள்ளூர் பாஜக பிரமுகர்கள் மூலம் அணுகி அவர்களை பாஜகவில் சேர்க்க திட்டமிடப்பட்டிருக்கிறது. அதேநேரத்தில் இப்போது திமுக ஆளும் கட்சியாக இருப்பதால் அதிருப்தியாக இருந்தாலும் கட்சியை விட்டு வெளியேற வேண்டாம் என்ற நிலையில் திமுகவினர் சிலர் இருக்கிறார்கள்.
அவர்களை எப்படியாவது சமரசம் செய்து பாஜகவுக்கு கொண்டு வர பகீரத முயற்சிகள் எல்லாம் எடுக்கப்படுகிறதாம். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் கட்சி தாவல் தகவல்கள் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக, திமுக மீது மக்கள் அதிருப்தி இருக்கும் பகுதிகளில் முக்கிய நபர்களை கட்சிக்குள் கொண்டு வந்து அவர்கள் மூலம் காய்களை நகர்த்தவும் தாமரைக் கட்சியினர் பணிகளை தொடங்கியுள்ளனர்.
ஆனால் அதில் எந்தளவு வெற்றி கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஏனென்றால் சென்னையில் முக்கிய புள்ளியாக இருந்த கு.க.செல்வம் திமுகவில் இருந்து பாஜகவுக்கு சென்று மீண்டும் திமுகவுக்கே வந்துவிட்டார். அவரைப் போலவே இன்னும் சிலரும் திமுகவுக்கு திரும்பினர். அந்த தவறுகள் எல்லாம் இப்போது நடக்காமல் கட்சிதமாக காய்களை நகர்த்த வேண்டும் என்பது மேலிடத்தின் உத்தரவாம். சூரியனின் கதிர்கள் தாமரையில் விழுமா? என்பது இன்னும் சில மாதங்களில் தெரியும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ