அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சப்பாத்தி, தயிர் சாதத்துடன் அறுசுவை உணவு வழங்க புதுவை முதல்வர் நாராயணசாமி திட்டம்!!
புதுச்சேரி சன்னியாசி குப்பத்தில் இயங்கிவரும் அரசு நடுநிலைப் பள்ளியில், புதிய கட்டிடங்கள், குடிநீர் இணைப்பு, விளையாட்டு உபகரணங்கள் என 32 லட்சம் ரூபாய் அளவிலான புனரமைப்புப் பணிகளைத் தனியார் தொண்டு நிறுவனம் செய்துள்ளது. தற்போது இந்த பணிகள் முடிவடைந்த நிலையில், நேற்று பள்ளியின் திறப்புவிழா நடைபெற்றுள்ளது.
இவ்விழாவில் புதுவை முதல்வர் நாராயணசாமி பேசுகையில், “புதுச்சேரி அரசு, கல்வித்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இந்திய அளவில் நமது புதுச்சேரி மாநிலம் பல்வேறு துறைகளிலும் முதலிடத்தில் உள்ளது. இன்னும் சிறப்பாகச் செயல்படுவதற்கு ஒருசில தடைகள் உள்ளன. அந்தத் தடைகள் விரைவில்
உடைத்தெறியப்பட்டு சிறப்பாகச் செயல்படுத்தப்படும். வரும் காலங்களில், தொண்டு நிறுவனங்கள் மூலம் பள்ளிகளுக்குத் தேவையான பல்வேறு வசதிகளைச் செய்வதற்கு உதவிகள் கோரப்பட்டுள்ளது.
மேலும், புதுச்சேரியில் ஸ்மார்ட் கிளாஸ் திட்டம் துவங்கப்பட உள்ளது. காரைக்காலில் 20 பள்ளிகள், புதுச்சேரியில் 40 பள்ளிகள் என ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ரூ.1.25 லட்சம் செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது எனவும் தெரிவித்தார். இதை தொடர்ந்து அவர் கூறுகையில், புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இரண்டு மாதங்களுக்குள் சப்பாத்தி, தயிர் சாதம் உள்ளிட்ட அறுசுவை மதிய உணவுகள் இனிப்புடன் வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.