பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு திட்டம்: தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிக்கூடங்களிலும் காலை உணவு விரிவாக்க திட்டத்தை, சில நாட்களுக்கு முன்னர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் மூலம் 17 லட்சம் மாணவ-மாணவிகள் பயன் அடைவார்கள் என்று தெரிவிக்கப்படது. கடந்த ஆண்டு இந்த திட்டம் குறித்து அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் முதற்கட்டமாக சில மாநகராட்சிகளும், நகராட்சிகளுலும் கிராமங்களிலும் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலக்கூடிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது. படிப்படியாக தமிழகம் முழுவதும் இந்த திட்டம் விரிவு படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
நாளிதழின் கொச்சையான விமர்சனம்:
தமிழக மக்கள் அதிகம் வாசிக்கும் பிரபல நாளிதழ்களுள் ஒன்று தினமலர். இந்த நாளிதழில், நேற்று ‘காலை உணவு திட்டம்’ குறித்த செய்தி ஒன்று வெளியாகியிருந்தது. இதில், “மாணவர்களுக்கு டபுள் சாப்பாடு, ஸ்கூல் கக்கூஸ் நிரம்பி வழிகிறது” என்று ஒரு தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. இந்த தலைப்பின் செய்தியில், மாணவர்கள் அனைவருக்கும் காலை உணவு வழங்கப்படுவதாகவும், வீட்டில் ஏற்கனவே சாப்பிட்டு வந்த மாணவர்களும் பள்ளியில் சாப்பிடுவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அடுத்த ஒரு மணி நேரத்தில் அவர்கள் இயற்கை உபாதைகளுக்கு ஆளாகும் நிலை ஏற்படுவதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது. நாளிதழின் இந்த செயலுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்பட பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
மேலும் படிக்க | காலை உணவால் நிரம்பி வழியும் கக்கூஸா? “கேவலமா இல்லையா?”வெட்கி தலைகுனிந்த தின *....!
தபெதிக மலம் வீசி போராட்டம்:
அரசு பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை கொச்சையாக விமர்சித்த தினமலர் நாளிதழை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழக பொது செயலாளர் கோவை இராமகிருட்டிணன் அறிவுறுத்தலின்படி தபெதிக சென்னை மாவட்ட செயலாளர் குமரன் தலைமையில் தினமலர் அலுவலகத்தின் மீது இன்று காலை 09 மணியளவில் மலம் வீசி போராட்டம் நடத்தப்பட்டது .
இந்த போராட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சார்ந்த காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பாளர் ராஜ்குமார், ஊடகப்பிரிவு செயலாளர் ஜனா விஜய், சென்னை மாவட்ட துணைச் செயலாளர் சசி , மயிலாப்பூர் பகுதி தலைவர் தீபன், சென்னை மாவட்ட அமைப்பாளர் சக்திவேல் , சீர்காழி ஒன்றிய துணைச் செயலாளர் முத்தமிழ் , நரேஷ் உள்ளிட்ட 15 பேர் கைதாகினர்.
தினமலர் நாளிதழ் விளக்கம்:
தமிழக அரசின் காலை உணவு திட்டத்தை கொச்சைப்படுத்தியதற்கு தினமலர் நாளிதழ் விளக்கம் கொடுத்திருந்தது. அதில், சேலம் மற்றும் ஈரோடு பதிப்பில் இவ்வாறான செய்தி இடம் பெற்றிருந்ததாகவும் அதற்கு சத்தியமூர்த்தி என்பவர் ஆசிரியராக இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தது.
திரு கி.ராமசுப்பு ஆசிரியராக கொண்ட தினமலர் சென்னை,கோவை ,மதுரை ,பாண்டிச்சேரி ,திருநெல்வேலி ,நாகர்கோவில் பதிப்புகளில் மேலே குறிப்பிட்ட செய்தி வெளிவரவில்லை.
திரு R. சத்தியமூர்த்தி ஆசிரியராக கொண்ட தினமலர் ஈரோடு,சேலம் பதிப்புகளில் இந்த செய்தி வெளியாகி உள்ளது
- கி.ராமசுப்பு,ஆசிரியர் pic.twitter.com/4yFEEkYbA5
— Dinamalar (@dinamalarweb) August 31, 2023
சேலம் மற்றும் ஈரோட்டில் மட்டும் இந்த செய்தி இடம் பெற்றிருந்த பதிப்பு வெளியாகியிருந்ததாகவும் சத்தியமூர்த்தி கடந்த 23 வருடங்களாக இரண்டு பதிப்புகளையும் தனியாக நடத்தி வருவதாகவும் அந்த விளக்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இருப்பினும், “தினமலர்” பெயரில் இப்படி ஒரு அருவருக்கத்தக்க, வெட்கி தலை குனியக்கூடிய செய்தி வெளியாகி இருப்பது மிகுந்த வருத்தத்தையும் மன வேதனையையும் அளிப்பதாக தினமலர் நாளிதழ் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தது
விளம்பர பதாகைகள் அகற்றம்:
தினமலர் அலுவலகம் அமைந்துள்ள ஆயிரம் விளக்கு பகுதியில், அந்த நாளிதழின் விளம்பர பதாகைகள் பல இடம் பெற்றிருந்தன. நேற்று, ஆயிரம் விளக்கு மற்றும் வள்ளுவர் கோட்டம் ஆகிய பகுதிகளில் இருந்த தினமலர் விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ