கடந்த 2021ம் ஆண்டு முக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தமிழகத்தில் ஆட்சி பொறுப்பை ஏற்றது. முக்கியமாக கொரோனா தொற்று அதிகமாக இருந்த சமயத்தில் ஆட்சி பொறுப்பை ஏற்று சிறப்பாக வழிநடத்தியது. 2021 முதல் தற்போது வரை தமிழக மக்களுக்கு தேர்தலில் சொன்ன வாக்குறுதிகளையும், அதற்கு மேலும் பல திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறது.
மகளிர் உரிமைத் தொகை திட்டம்
தமிழக மக்கள் அனைவரும் எதிர்பார்த்த மகளிருக்கு உரிமைத் தொகை திட்டம் செப்.15 முதல் அமலுக்கு வருகிறது. இது ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டமாகும், இதன் கீழ் தகுதியுள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதம் ரூ.1,000 பெற உரிமைத் தொகை வழங்கப்படும். நிதி உதவி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு மாதாந்திர அடிப்படையில் நேரடியாக மாற்றப்படும். இந்த திட்டத்தால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.7,000 கோடி செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து சேவை
திமுக ஆட்சி பொறுப்பிற்கு வந்த உடனேயே மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து சேவையை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் மூலம் தினமும் 49 லட்சம் பெண்கள் பயணம் செய்கின்றனர் என்று தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. கட்டணமில்லா பேருந்து சேவை திட்டம் மகளிர் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளதாக ஆய்வில் தகவல் தெரிவித்துள்ளனர். மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத்திற்காக 2023-24ஆம் நிதியாண்டில் ரூ.2,800 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இயங்கும் பேருந்துகளில் 74.46% மகளிர் கட்டணமில்லா பேருந்துகளாக இயக்கப்படுகின்றன. கட்டணமில்லா பேருந்தின் மூலம் சராசரியாக மகளிர் சேமிக்கும் தொகை மாதம் ரூ.1000 என கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நடத்திய ஆய்வில் பெண்கள் மாதத்திற்கு சுமார் 50 முறை பேருந்தில் பயணிப்பதாக தகவல் அளித்துள்ளனர்.
பள்ளிகளில் காலை உணவு திட்டம்
ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலக்கூடிய தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என்று ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில், இத்திட்டத்தினை செயல்படுத்தும் வகையில் ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 417 மாநகராட்சி பள்ளிகளில் 43,681 மாணவர்கள், 163 நகராட்சி பள்ளிகளில் 17,427 மாணவர்கள், 728 வட்டாரம் மற்றும் கிராம ஊராட்சி பள்ளிகளில் 42,826 மாணவர்கள், 237 தொலைதூர, மலைப்பிரதேச பள்ளிகளில் 10,161 மாணவர்கள், என மொத்தம் 1,545 பள்ளிகளில் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.
பெண்களின் பாதுகாப்பிற்காக 'அவள்' திட்டம்
பெண்களின் பாதுகாப்பிற்காக 'அவள்' திட்டம் தொடங்கப்பட்டது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 'அவள்' திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் 50 ஆயிரம் பேருக்கு தற்காப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. சென்னை மற்றும் மதுரை ஆகிய பெருநகரங்களில் பெண் காவலர்கள் தங்கும் விடுதிகள் அமைக்கப்பட உள்ளது. அனைத்துக் காவல் நிலையங்களிலும், பெண் காவலர்களுக்கென கழிவறை வசதியுடன் தனி ஓய்வறை கட்டித் தரப்படும் என்று முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதவிர, ஊட்டச் சத்து இல்லாத தமிழகத்தை உருவாக்குவது, தகைசால் பள்ளிகள் என்ற திட்டம், நகர்ப்புற மருத்துவ நிலையங்கள் அமைக்கக்கூடிய திட்டம், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம், புதுபைப் பெண் திட்டம், வேலைவாய்ப்பு முகாம்கள், விவசாயிகள் நலன், விளையாட்டு மேம்பாடு என பல்வேறு திட்டங்களை திமுக அரசு செய்து வருகிறது.
புதுமைப்பெண் திட்டம்
பெண் குழந்தைகள் கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களின் உயர்கல்விக்கு உதவி செய்யும் நோக்கிலும் 'புதுமைப்பெண் திட்டம்' திமுக அரசால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இதன் மூலமாக அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு உயர்கல்வி பயில மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. குடும்பச் சூழல், வறுமை காரணமாக கல்வியை தொடர முடியாத மாணவிகளுக்கு இது உதவும் என்று அரசு தெரிவித்துள்ளது.
மகளிர் சுய உதவிக்குழு கடன்
திமுக ஆட்சிக்கு வந்தபிறகு புதியதாக ஆயிரக்கணக்கான மகளிர் சுய உதவிக்குழுக்கள் தொடங்கப்பட்டுள்ளன. பெண்களுக்கு பயிற்சி அளித்து அவர்களுக்கு தொழில் தொடங்க அரசால் கடனும் வழங்கப்பட்டு வருகிறது.
2022 - 23ஆம் நிதி ஆண்டில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 25,219 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி அளிக்கப்பட்டு இதன் மூலம் 4 லட்சத்து 39 ஆயிரத்து 349 சுய உதவி குழுக்கள் பயனடைந்துள்ளன. 2023 - 24ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கடன் உதவி 30 ஆயிரம் கோடியாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழ்நாட்டில் 7.22 லட்சம் மகளிர் குழுக்கள் உள்ளன.
முதல் பெண் அர்ச்சகர்
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தை 1970ல் கருணாநிதி முன்னெடுத்தார். இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது நிறைவேற்றியுள்ளார். மேலும் பெண்களும் அர்ச்சகர், ஓதுவார் ஆகலாம் என அறிவித்து முதல் பெண் ஓதுவாராக சுஹாஞ்சனா என்பவர் நியமிக்கப்பட்டு, செங்கல்பட்டு மாவட்டம் மாடம்பாக்கத்தில் உள்ள தேனுபுரீஸ்வர் கோயிலில் பணியாற்றி வருகிறார்.
பேறுகால விடுப்பு
தாய்மையின் முக்கியத்துவத்தை உணர்ந்து மகளிருக்கான ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுப்பை 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தி தமிழக அரசு கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவித்தது. இதற்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
அரசுப்பணியில் பெண்களுக்கு இடஒதுக்கீடு
அரசு பணி நியமனங்களில் பெண்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீடான 30 சதவிகிதம், 40 சதவிகிதமாக உயர்த்தப்படும் என்று 2021-22 நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. அதுபோல, உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது.
அரசு மகளிர் விடுதி
தமிழ்நாடு அரசு சார்பில் வேலைக்குச் செல்லும் பெண்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு அரசு மகளிர் விடுதிகள் ஏற்படுத்தப்படும் என்றும் திமுக அரசு அறிவித்துள்ளது.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தில், குடும்பத்தலைவர்களாக உள்ள பெண்களுக்குக் கூடுதலாக 50 நாட்கள் வேலை தருவது, முக்கியப் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகளை பெண்களுக்கு வழங்குவது, பெண் குழந்தைகள் பாதுகாப்புக்காக தற்காப்புக்கலை பயிற்சி வழங்குவது எனப் பெண்களின் முன்னேற்றத்துக்கான பல திட்டங்களை திமுக அரசு தொடர்ந்து செயல்படுத்தவுள்ளது.
இல்லம் தேடி கல்வி
`இல்லம் தேடி கல்வி' என்ற கல்வி பயிற்சி திட்டத்தின் கீழ் 3.3 மில்லியன் மாணவர்கள் பயனடைந்தார்கள். இரண்டு லட்சம் பெண் ஆர்வலர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு நாளும் 90 நிமிடம் என்ற கணக்கில் இந்த வகுப்புகள் நடந்தன. கல்வி ஆர்வம் 24 சதவீதம் உயர்ந்திருப்பதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
இப்படி மக்கள் நலத் திட்டங்களை அடுக்கடுக்காக நிறைவேற்றிவரும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தற்போது மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கியுள்ளது.
மேலும் படிக்க | மகளிர் உரிமைத் தொகை: ரூ.1000 செலுத்தும் பணி தொடங்கியது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ