மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா மற்றும் குன்னம் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் ஆகியோர் அதிமுகவிற்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற கோரிக்கையை முன்னெடுத்தனர். ஒற்றை தலைமை கோரிக்கைக்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்தது. இது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமில்லாமல் பொதுச்செயலாளர் பதவி குறித்து, தமிழகம் முழுவதும் இபிஎஸ் - ஓபிஎஸ் ஆதரவாளர்கள் போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் வைத்து மீண்டும் பரபரப்பை வருகின்றனர்.
இதனையடுத்து நேற்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் கூட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை செய்தது. பின்னர் செய்தித்தொடர்பாளர்கள் உட்பட யாரும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கக்கூடாது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியின் பல்வேறு பகுதிகளில் அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் கட்சி தலைமை ஏற்க வேண்டும் என வலியுறுத்தி, போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
இதற்கு முன்னதாக “பொதுச்செயலாளராக பொறுப்பேற்க வாருங்கள் எடப்பாடியாரே” என்ற வாசகம் அடங்கிய போஸ்டர் ஒட்டப்பட்டது.

அதேபோல் செங்கோட்டையன் பொதுச்செயலளராக வேண்டும் என்ற வாசகம் அடங்கிய போஸ்டரும் சிவகங்கையில் ஒட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
