Gossip Tamil Latest News : கருப்பட்டி காபி இன்னைக்கு குடிக்கணும் என்ற ஆசையில் குசும்பன் வேகவேகமாக டீ கடைக்கு சென்று கொண்டிருந்தான். அந்தநேரம் பார்த்து கடையை வேகவேகமாக மூடிக்கொண்டிருந்தார் டீ மாஸ்டர். ‘என்னணே இன்னைக்கு இவ்வளவு சீக்கிரமாக கடைய எடுத்து வச்சுட்டீங்க, நான் வேற காலியான கூடாரத்த பத்தின கதையோட வந்தேன், நீங்க வேற இப்போ கிளம்புற பிஸியில் இருக்குறீங்க போல’ என குசும்பன் சொல்ல, ’ தம்பி, உனக்கு இல்லேனு சொல்லுவேனா, அந்தப் பக்கம் போய் உட்காரு, இதோ போடுறேன், அதுசரி அதென்ன காலியான கூடாரம் மேட்டர்?’ என கேட்டார் டீ மாஸ்டர்.
‘அண்ணே முன்னாள் கதர் கட்சியோட தலைவரு இப்போ தனிக்கட்சி நடத்திட்டு வர்றாரு இல்ல, அவரு தன்னோட கட்சியை பலப்படுத்த மண்டலம் மண்டலமா டிரிப்ல இருக்கிறாரு. இன்னும் 18 மாசத்துல வர்ற கோட்டை தேர்தலுக்குள்ள கட்சிய பலப்படுத்த, இந்த சுற்றுப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறாரு. எப்படியாச்சும் ஒரு லெவலுக்காவது கட்சிய கொண்டு வந்துடனும்னுங்கிறது அவரோட ஆசை. அப்போ தான் கோட்டை தேர்தல்ல சீட் பேரம் பேசறத்துக்கூட நம்மள மதிச்சு கூப்புடுவாங்கனு யோசிக்கிறாராம். இப்போ கட்சி கூடாரமே இல்லாம தான் படுமோசமான நிலைமையில இருக்குதுங்கிறதையும் அவரு நல்லாவே தெரிஞ்சு வச்சிருக்கிறாரு.
சொல்லப்போனால், மாநில அளவுல தன்னை ஒருத்தர தவிர வேறு யாருமே அறிஞ்ச முகமாக இல்லையே, தான் ஒருத்தரு மட்டுமே கட்சியா? என்ற வருத்தத்திலும் இருக்கிறார். அதனால், தலைவரா இருக்கிற நாம இப்போ களத்துல இறங்கி தொண்டர்கள சேர்க்கலாம்னு டூர் அடிச்சிட்டாரு. இப்போ இருக்கிற நிலைமையில கூட்டணி கட்சியா மதிச்சு நம்மள சீட் பேரத்துக்கூட கூப்புட மாட்டங்கனும் புரிஞ்சகிட்ட முன்னாள் கதர் தலைவரு, ஏரியா வாரியா போய் ஆள் பிடிக்கலாம்னு போறாரு.
ஏற்கனவே இருந்த ஒன்றிரண்டு முக்கிய நிர்வாகிகளும் ஓடிவிட்டதால, தன்னோட இமேஜ்ஜை காப்பாத்திக்கவாவது ஏதாச்சும் பண்ணணும் இந்த டூர் ஏற்பாடு பண்ணி நிர்வாகிகள சந்திக்கிறாரு. அப்போது கட்சி நிர்வாகிகளிடம் பேசும்போது, நம்ம கட்சிய உங்க ஏரியாவுல பலப்படுத்துங்க, அப்படி பண்ணா தான் நமக்கு கூட்டணிக்குள்ள ஒரு மரியாதை இருக்கும், நாமளும் நமக்கு தேவையான சீட்டை கேட்கலாம். இல்லை என்றால் அவங்களா பார்த்து ஏதாவது ஒன்னு ரெண்டு சீட் கொடுப்பாங்க. ஒரு கட்சி நடத்துற நமக்கு அப்படி நடந்தா அது அசிங்கம் என்றும் அந்த முன்னாள் கதர் தலைவரு சொல்றாராம்.
அது சரி தலைவரே, பைசா இல்லாம என்ன செய்யறது என கேட்டவங்க கிட்ட நேர்மை தூய்மை என பேசவும் தலையை சொறிந்த நிர்வாகிகள் நீங்க சொல்றத செய்றோம்னு சொல்லிட்டு வெளியில வந்து சிரிச்சிட்டே கிளம்பிட்டாங்களாம். இன்னும் சிலரோ, நமக்கு எதுக்கு தலைவர இந்த தனிக்கட்சி எல்லாம், பேசாம ஸ்டார் நடிகர் பண்ண மாதிரி இப்போது நீங்க கூட்டணியில இருக்கிற பூ கட்சியோட இணைச்சுருங்களேன் என சொல்லியிருக்காங்க. அதகேட்டு டென்ஷனான முன்னாள் கதர் தலைவரு, அது எனக்கு தெரியும் என சொல்லிட்டு வேலைய பாக்க சொல்லிட்டாராம் நிர்வாகிகள" என கதையை முடிச்ச குசும்பன் கருப்பட்டி காபியையும் குடிச்சுட்டு கிளம்பினான்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ