சென்னை: தளபதி விஜய் தனது அடுத்த படமான லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘மாஸ்டர்’ படத்திற்காக நெய்வேலியில் விஜய் சேதுபதியுடனான சண்டைக் காட்சிக்காக படப்பிடிப்பில் இருந்தார். வருமான வரி சோதனை படப்பிடிப்புக்கு இடையூறாக இருந்ததால், பாதியில் படப்பிடிப்பை ரத்து செய்யப்பட்டது. அவரிடம் அங்கேயே ஐந்து மணி நேர விசாரணைகளுக்குப் பிறகு, நேற்று இரவு அவரை சென்னைக்கு அழைத்து வந்தனர் வருமான வரித்துறையினர். இன்றும் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. இதுவரை வெளியான தகவலின் அடிப்படையில் விஜய்யின் எந்தவொரு வளாகத்திலும் இருந்து குறிப்பிடத்தக்க எந்தவித ஆவணமும் கிடைக்கவில்லை என்றும், இன்று மாலைக்குள் விசாரணை நடவடிக்கைகள் முடிவடையும் என்றும் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையில் பா.ஜனதா தேசிய செயலாளர் எச். ராஜா, நடிகர் விஜய் மீதான சோதனை தொடர்பாக ட்வீட் செய்து கருத்தை பகிர்ந்துள்ளார். மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு விஜய்யின் உண்மையான பெயரான "ஜோசப் விஜய்" என்று எச். ராஜா குறிப்பிட்டு இருந்தார். அப்பொழுது விஜய்யின் ரசிகர்கள் எச். ராஜாவை கடுமையாக விமர்சித்து இருந்தனர்.
முன்னதாக விஜய்யின் ‘மெர்சல்’ படம் வெளியீட்டின் போது எச். ராஜா, விஜய்யின் வாக்காளர் ஐடியை ட்வீட் செய்திருந்தார். அதில் அவரது அசல் பெயர் ஜோசப் விஜய் மற்றும் அவர் ஒரு கிறிஸ்தவர் என்பதை சுட்டிக்காட்டினார். இந்த ட்வீட் சர்ச்சையை உருவாக்கியது. ஆனால் விஜய் ஆதரவாளர்கள் ஜோசப் விஜய் என்ற பெயரை தேசிய அளவில் பிரபலப்படுத்தினர் மற்றும் பல பிரபலங்கள் மாஸ் ஹீரோவான விஜய்யை ஆதரித்தனர்.
அதை மேற்கோள்காட்டி, விஜய்-க்கு ஆதரவளித்த அவரது ரசிகர்களை ட்ரோல் செய்துள்ளார். அதாவது அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒருவருடைய உண்மையான பெயரைச் சொன்னதுக்கே வானத்துக்கும் பூமிக்கும் குதித்தவரெல்லாம் இப்ப என்ன ஆவார்களோ? உண்மை உண்மையா வெளிவருதே" எனக் கருத்து தெரிவித்துள்ளார்.
ஒருவருடைய உண்மையான பெயரைச் சொன்னதுக்கே வானத்துக்கும் பூமிக்கும் குதித்தவரெல்லாம் இப்ப என்ன ஆவார்களோ? உண்மை உண்மையா வெளிவருதே.
— H Raja (@HRajaBJP) February 6, 2020
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.