ஜல்லிக்கட்டு பரிசு: காளையை அடக்கினால் கார், பைக், பிரிட்ஜ், டி.வி....

Last Updated : Feb 4, 2017, 04:06 PM IST
ஜல்லிக்கட்டு பரிசு: காளையை அடக்கினால் கார், பைக், பிரிட்ஜ், டி.வி.... title=

உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் மூன்றாம் நாள் நடை பெறுவது வழக்கம். உச்சநீதிமன்றம் தடை காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாத ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு மாணவர் மற்றும் இளைஞர் அமைப்புகள் போராட்டம் காரணமாக ஜல்லிக்கட்டை நடத்த தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்ததோடு, சட்டமன்றத்திலும் அதனை நிறைவேற்றியது. இந்த தடை நீக்க சட்டத்திற்கு குடியரசு தலைவரும் ஒப்புதல் வழங்கி உள்ளார். இதனால் அலங்காநல்லூரில் வருகிற 10-ம் தேதி ஜல்லிக்கட்டு நடக்க உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் தீவிரமாக செய்து வருகின்றனர். போராட்டங்களில் வெற்றி பெறுவோருக்கு பரிசுகளும் வழங்கப்பட உள்ளன. 

இது தொடர்பாக விழா கமிட்டி உறுப்பினர்கள் கூறியதாவது:-

ஜல்லிக்கட்டில் பங்கேற்று, பிடிபடாத காளைகளின் உரிமையாளர்கள், மாடுகளை மடக்கி பிடிக்கும் வீரர்கள் போன்றோருக்கு கார், இருசக்கர வாகனம் என பல பரிசுகள் வழங்கப்பட உள்ளன. இவை தவிர, பவர் டிரில்லர் மெஷின், எவர் சில்வர் பாத்திரங்கள், பீரோ, சைக்கிள்கள், வேட்டி, துண்டுகள், ரொக்கம் என பல பரிசுகள் வழங்கப்படுகின்றன. 2014-ம் ஆண்டுக்கு பிறகு தற்போது ஜல்லிக்கட்டு நடைபெறுவதால் காளைகள் அதிக அளவில் பதிவு செய்யப்படுகின்றன.

6-ம் தேதி மாடுபிடி வீரர்களுக்கு டோக்கன் வழங்கப்படுகிறது. மறுநாள் காளைகளின் உரிமையாளர்கள் பதிவு செய்யப்படுகின்றனர். ஜல்லிக்கட்டை பார்வையிட வரும் பார்வையாளர்களுக்கான மேடையும் அமைக்கப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டு தினத்தன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

ஜல்லிக்கட்டு நடைபெற உறுதுணையாக இருந்த மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும், அரசியல் கட்சி தலைவர்களுக்கும், ஜல்லிக்கட்டு ஆர்வலருக்கும் கிராம பொதுமக்களுக்கும் கூட்டத்தில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் ஜல்லிக்கட்டு விழாவிற்கு, முதல்-அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்ட நிலையில், அவர்கள் வந்தால் சிறப்பான வரவேற்பு கொடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என கமிட்டியினர் கூறினார்கள்.

Trending News