டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களில் இடதுசாரிகள் மற்றும் ஏபிவிபி மாணவர்களிடையே ராம நவமி நிகழ்ச்சியை ஒட்டி நேற்று மோதல் வெடித்தது.
ராம நவமியன்று விடுதி கேண்டீனில் அசைவ உணவு சமைக்கக் கூடாது என்று ஏபிவிபி மாணவர்கள் சமையல்காரரை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு இடதுசாரி அமைப்பை சேர்ந்த மாணவர்கள் ஆட்சேபம் தெரிவித்ததால் இருதரப்பிலும் மோதல் உருவானது.
இருதரப்பு மாணவர்கள் மோதிக் கொண்டதில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம் அடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் டெல்லி ஜவகர்லால் பல்கலைக்கழகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அசைவ உணவு உண்டதற்காக டெல்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விடுதியில் தாக்குதல் நடத்தப்பட்டது கண்டனத்திற்குரியது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வறுமாறு :-
டெல்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் விடுதியில் அசைவ உணவு அருந்தியதற்காக, மாணவர்கள் மீது அகில பாரதிய வித்யார்தி பரிஷத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கொடும் தாக்குதல் தொடுத்திட்ட செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. உணவு எனும் தனிமனித உரிமையில் தலையிட்டு, அதற்காகத் தாக்குதல் தொடுத்திருக்கிற பாஜகவின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்தி பரிஷத்தைச் சேர்ந்தவர்களின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.
மேலும் படிக்க | ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் அசைவ உணவு சாப்பிட்டதால் அராஜகம்; பல மாணவர்கள் படுகாயம்
உணவு, உடை, வழிபாடு போன்றவையெல்லாம் தனிமனித விருப்பங்களைச் சார்ந்தவையாகும். அவற்றை மறுத்து, இடையூறு செய்வதும், அதனைக் காரணமாகக் காட்டி வன்முறைக்கு வித்திடுவதுமான மதவெறிச்செயல்கள் எதன்பொருட்டும் ஏற்புடையதல்ல. இவையாவும் இந்திய அரசியலமைப்புச்சாசனம் வழங்கும் அடிப்படை உரிமைகளையே மறுக்கும் மனித உரிமை மீறலாகும். பாஜகவின் ஆட்சியதிகாரம் தொடங்கப்பட்டக் காலத்திலிருந்து, இதுபோன்ற மோதல்களும், தாக்குதல்களும் இந்தியப்பெருநிலம் முழுமைக்கும் அதிகரித்து வருவது நாட்டுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தும் கீழானச் செயல்களாகும்.
ஆகவே, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் விடுதியில் அசைவ உணவு உண்டதற்காக தாக்குதல் தொடுத்திட்ட அகில பாரதிய வித்யார்தி பரிஷத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது கல்லூரியின் நிர்வாக ரீதியாகவும், சட்டரீதியாகவும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | நாட்டை உலுக்கிய JNU வன்முறை... ஒரு சுருக்கமான பார்வை!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR