தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மற்றும் திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7 ஆம் நாள் மாலை 6.10 மணியளவில் காலமானார். அவரை மரினாவில் அமைந்துள்ள அண்ணாவின் நினைவிடத்திற்கு அருகில் அடக்கம் செய்ய வேண்டும் என தமிழக அரசிடம் மு.க. ஸ்டாலின் உட்பட குடும்ப உறுப்பினர்கள் மற்றும் முக்கிய கட்சி தலைவர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் மெரினாவில் அடக்கம் செய்ய நிலம் ஒதுக்க முடியாது என்று தமிழகரசு தெரிவித்தது. இதனையடுத்து திமுக தொண்டர்கள் "வேண்டும் வேண்டும் மெரினா வேண்டும்" என்ற கோசத்துடன், மெரினா கிடைக்கவில்லை என்றால் போராட்டம் வெடிக்கும் என தமிழக அரசை எச்சரித்தனர். தமிழகம் முழுவதும் ஒரு பதற்றமான சூழ்நிலை ஏற்ப்பட்டது.
அந்த பதற்றமான சூழ்நிலையிலும் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், திமுக தொண்டர்கள் அமைதியாக இருக்க வேண்டும். எந்தவித அசம்பாவிதத்திலும் ஈடுபடக்கூடாது என கூறி தொண்டர்களை அமைதிப் படுத்தினார். இதேபோல 50 ஆண்டுகால திமுக-வின் தலைவராக இருந்த மு.கருணாநிதி மறைந்த போதும் தொண்டர்கள் அமைதிக் காக்க வேண்டும் யாரும் தற்கொலை செய்துக்கூடாது எனக்கூறி தனது திறமையை வெளிப்படுத்தினார்.
ஒரே ஒரு முறை "அப்பா" என்று அழைத்துக் கொள்ளட்டுமா? என்று உருக்கமான கடிதம் எழுதியது, மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் கூறிய போது மு.க. ஸ்டாலின் உணர்ச்சிவசப்பட்டு அழுத காட்சியாகட்டும் மக்கள் மனதை பெரிதும் பாதித்தது என்பதில் ஐயமில்லை.
தற்போது கருணாநிதியின் மறைவுக்கு பின்பு திமுக-வை வழிநடத்துவது யார் என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை. ஆனால் கருணாநிதிக்கு பின்பு திமுக-வின் அடுத்த அடையாளம் என்று பார்த்தால், அது மு.க. ஸ்டாலின் தான். அவர் இதுவரை திமுக-வில் ஆற்றிய பணிகள் என்ன? எத்தனை தேர்தல்களை சந்தித்து உள்ளார் என்ற விவரத்தை பார்ப்போம்.
மு.க ஸ்டாலின் என்று அழைக்கப்படும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் 1953 ஆம் ஆண்டு மார்ச் 1 நாள் பிறந்தார். தனது தந்தை கருணாநிதியின் அரசியலால் ஈர்க்கப்பட்டு இளம் வயதிலேயே அரசியலில் மிகுந்த ஆர்வம் காண்டினார். தனது பள்ளி பருவத்திலேயே கோபாலபுரம் இளைஞர் திமுக என்ற அமைப்பை உருவாக்கி பொதுப்பணி மற்றும் சமூகப்பணிகளை செய்து வந்தார். இப்படி படிப்படியாக அரசியலில் தன்னை நுலைத்துக்கொண்ட ஸ்டாலின், 1975 ஆம் ஆண்டு மிசா சட்டத்தின் கீழ் கைதாகி, சிறையில் அவருக்கு பல இன்னல்கள் கொடுக்கப்பட்டது. அவர்கள் தாக்கப்பட்டனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பரவியது. இதன் மூலம் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பேசப்பட்டார்.
1980 ஆம் ஆண்டு திமுக இளைஞரணி அமைப்பு உருவானது. அதில் உறுப்பினராக இருந்த ஸ்டாலின், 1984 ஆம் ஆண்டு திமுகவின் இளைஞர் அணி செயலாளராக நியமிக்கப்பட்டார். அதே ஆண்டு(1984) ஆயிரம் விளக்கு தொகுதியில் முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் தனது முதல் தேர்தலில் அவர் தோல்வியுற்றார்.
1989 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் மீண்டும் திமுக சார்பில் போட்டியிட்டார். இம்முறை அவர் வெற்றி பெற்றார்.
பின்னர் நடைபெற்ற 1991 ஆம் ஆண்டு தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் தோல்வியுற்றார். 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் மீண்டும் போட்டியிட்டார். இந்த முறை அதிக அளவு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் 69.72 சதவீத ஓட்டுக்களை பெற்றார். இது தான் ஸ்டாலின் அதிக ஓட்டு சதவீதமாகும்.
பின்னர் நடைபெற்ற 2001, 2006, 2011, 2016 சட்டமன்ற தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி வாகை சூடினார். இதில் 2011, 2016 ஆம் ஆண்டுகளில் கொளத்தூர் தொகுதியில் மு. க. ஸ்டாலின் போட்டியிட்டார்.
அதேபோல 1996 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்று சென்னை மாநகராட்சி மேயராக மு.க. ஸ்டாலின் பதவியேற்றார். பின்னர் 2001 ஆம் ஆண்டு மீண்டும் மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்று சென்னை மாநகராட்சி மேயரானார். ஆனால் "ஒருவர் ஒரு பதவி தான் வசிக்க வேண்டும்" என
அரசு கூறியதால், மாநகராட்சி பதவியை துறந்தார்.
2006 ஆம் ஆண்டு மு.க. ஸ்டாலின் உள்ளாட்சித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். பின்னர் 2009 ஆம் ஆண்டு துணை முதல்- அமைச்சர் பதவி மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டது. தற்போது தமிழக எதிர்கட்சி தலைவராக மு.க. ஸ்டாலின் உள்ளார்.
இவர் சென்னை மாநகராட்சி மேயராக இருந்த போதும், எதிர்கட்சி தலைவராக இருந்த போதும் பாராட்டக்கூடிய பல செயல்களை செய்துள்ளார். ஆனால் கருணாநிதியின் மறைவுக்கு பின்னர், அவரை போல கட்சியையும், மூத்த தலைவர்களையும் அரவணைத்து கட்சியை கட்டுக்கொப்புடன் செல்வாரா? என்று பார்த்தால் பல சந்தேகங்களை எழும்ப தான் செய்கிறது. ஆனால் ஒவ்வொருவருக்கும் தனிச்சிறப்பு, தனிபாணி என்று ஒன்று இருக்கும். அப்படி மு.க.ஸ்டாலின் தனது தனிசிறப்பை கட்சிக்கு அளித்து திமுகவின் அடையாளம் என நிருபிப்பாரா? என காலம் தான் பதில் சொல்லும்.
இத்தனை நாட்களாக ஸ்டாலின் மீது பல விமர்சனங்கள் வைக்கப்பட்டன. ஆனால் திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு பின்னர் மு.க.ஸ்டாலின் மீது மிகப்பெரிய ஒரு எதிர்பார்ப்பு ஏற்ப்பட்டு உள்ளது. திமுகவில் அடுத்து என்ன நடக்கும் என்று அனைவரும் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.