சென்னை: தமிழக வேலைவாய்ப்புகளை வட மாநிலத்தவருக்கு வாரி வழங்குவதை பொறுத்துக் கொள்ள முடியாது. தமிழகத்தில் தமிழருக்கே முன்னுரிமை என சட்டத்திருத்தங்கள் கொண்டு வரவில்லை என்றால் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மத்திய, மாநில அரசை எச்சரித்துள்ளார். அதுக்குறித்து அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் மதுரை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட ரயில்வேயில் குரூப் டி அல்லது லெவல் ஐ பணியிடங்களுக்காக இந்திய அளவில் தேர்வு நடைபெற்றது. அந்த தேர்வில் வட மாநிலத்தை சேர்த்தவர்கள் 90 சதவீதம் பேர் தேர்வு பெற்றுள்ளதாக கூறப்பட்டது. இந்த தகவலால் அதிர்ச்சியடைந்த மு.க.ஸ்டாலின், தமிழகத்தை சேர்ந்த 10 பேர் கூட தேர்வாகவில்லை என்பது கடும் கண்டனத்துக்குரியது எனக் கூறியுள்ளார். மேலும் தமிழக இளைஞர்களுக்கு தமிழகத்தில் வேலைவாய்ப்பு கிடைப்பது என்பது மிகவும் கேள்விக்குறியாகி விட்டது. இதற்கு காரணம் மத்தியில் பாஜகவும், மாநிலத்தில் அதிமுகவும் ஆட்சி பொறுப்பில் இருப்பதே ஆகும். இது மிகவும் வேதனையளிக்கிறது.
வட மாநிலத்தவருக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதைக் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பகிர்ந்துள்ளார். அவர் கூறியது,
ரயில்வே பணியிடத் தேர்வுகள் - மின்சார வாரியத் தேர்வுகள் - 'சிவில் நீதிபதிகள்' தேர்வு என மத்திய அரசும், மாநில அரசும் போட்டி போட்டுக் கொண்டு தமிழகத்தில் உள்ள காலிப் பணியிடங்களை வட மாநிலத்தவருக்கு வாரி வழங்கி - தமிழக இளைஞர்களுக்கு துரோகம் இழைப்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாது. pic.twitter.com/g9UtbGpnUd
— M.K.Stalin (@mkstalin) September 19, 2019
ரயில்வே பணியிடத் தேர்வுகள் - மின்சார வாரியத் தேர்வுகள் - சிவில் நீதிபதிகள் தேர்வு என மத்திய அரசும், மாநில அரசும் போட்டி போட்டுக் கொண்டு தமிழகத்தில் உள்ள காலிப் பணியிடங்களை வட மாநிலத்தவருக்கு வாரி வழங்கி தமிழக இளைஞர்களுக்கு துரோகம் இழைப்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாது.
வேலைவாய்ப்பின்மை பெருகிவரும் நிலையில், தமிழக வேலைவாய்ப்புகளில், தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் உரிய சட்டத்திருத்தங்கள் கொண்டுவர முன்வராவிட்டால் இளைஞர் பட்டாளத்தைத் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடும் என எச்சரிக்கிறேன்!
இவ்வாறு தனது சமூக வலைதளத்தில் கூறியுள்ளார்.