தமிழகத்தில் விஏஓ உட்பட 6,491 பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு தொடங்கியது!!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) கிராம நிர்வாக அலுவலர் 397 பணியிடங்கள், இளைநிலை உதவியாளர் 2688, வரித் தண்டலர், நில அளவர், வரைவாளர், தட்டச்சர் என மொத்தம் 6 ஆயிரத்து 491 காலி பணியிடங்கள் உள்ளதாகவும் எழுத்துத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை (செப்.1) நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இத்தேர்வுக்கான அறிவிக்கை கடந்த ஜூன் 14 ஆம் தேதி வெளியானது.
சுமார், 301 தாலுகா மையங்களில் 5 ஆயிரத்து 575 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்துத் தட்டச்சர் உள்ளிட்ட 6 ஆயிரத்து 491 பணியிடங்களுக்காக குரூப் 4 தேர்வு நடத்தப்படுகிறது. காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை 3 மணி நேரம் தேர்வு நடைபெறும்.
இந்த தேர்வுக்கு ஜூலை14 ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. மொத்தம் 16 லட்சத்து 30 ஆயிரம் விண்ணப்பித்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் குரூப் 4 தேர்வுக்கான எழுத்து தேர்வு இன்று நடக்கிறது. எழுத்துத் தேர்வை எழுதுவோருக்கு கடும் கட்டுப்பாடுகளை டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் விதித்துள்ளனர். செல்போன் மற்றும் வாட்ச், மோதிரம் போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த பொருள் வைத்திருப்போரை தேர்வு எழுத அனுமதி கிடையாது. மேலும் அவர்களின் விடைத்தாள் செல்லாததாக்கப்படும். தேர்வு எழுத பேனா மட்டுமே கொண்டு வர வேண்டும். வண்ண எழுதுகோல், பென்சில், புத்தகங்கள், குறிப்புகள், வரைபட கருவிகள், பாடப்புத்தகங்கள் ஆகியவற்றைக் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்வு நேரத்திற்கு அரை மணி நேரம் முன்பாக தேர்வு மையத்திற்குள் இருத்தல் நல்லது என்றும் டி.என்.பி.எஸ்.சி குறிப்பிட்டுள்ளது.