காவிரி டெல்டாவில் மேலும் ஒரு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு ஏல அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் இந்த செயல்பாட்டை கண்டிப்பதாக பாமக நிறுவனம் ராமதாசு தெரிவித்துள்ளார்!
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவு...
"தமிழக காவிரி பாசன மாவட்டங்களில் மேலும் ஒரு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களைச் செயல்படுத்த ஏற்கனவே எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் புதிய திட்டங்களை அறிவிப்பது கண்டிக்கத்தக்கது.
இந்தியாவில் எண்ணெய் வளங்களைக் கண்டறிந்து உற்பத்தி செய்வதற்காக ஹைட்ரோ கார்பன் வளங்களைக் கண்டறிதல் மற்றும் உரிமம் வழங்கும் கொள்கையை மத்திய அரசு கடந்த 2017-ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. அனைத்து வகையான ஹைட்ரோ கார்பன் வளங்களையும் ஒரே உரிமத்தின் மூலம் கண்டறிந்து எடுப்பது தான் இக்கொள்கையின் நோக்கமாகும். அதன்படி மொத்தம் 14 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ள மத்திய அரசு, அவற்றுக்கான ஏலம் மற்றும் விண்ணப்ப அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இவற்றில் ஒரு திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்படுகிறது.
தமிழ்நாட்டில் காவிரி பாசன மாவட்டங்களில் மொத்தம் 471.19 சதுர கி.மீ பரப்பளவில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இத்திட்டம் எந்தப் பகுதியில் செயல்படுத்தப்படும் என்பது இப்போது வரை துல்லியமாக அறிவிக்கப்படவில்லை. தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று போற்றப்படும் காவிரி பாசனப் பகுதிகளில் மீண்டும், மீண்டும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்துவது விவசாயத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் ஈடு செய்ய முடியாத அளவுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
காவிரிப் பாசன மாவட்டங்களில் இதுவரை மீத்தேன், ஷேல் கேஸ் திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என்றும், இனியும் அத்தகைய திட்டங்கள் செயல்படுத்தப்படாது என்றும் நாடாளுமன்ற மக்களவையில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எழுப்பிய வினாவுக்கு பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பலமுறை பதிலளித்திருந்தார். இத்தகைய சூழலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் என்ற பெயரில் மீத்தேன் மற்றும் பாறை எரிவாயுத் திட்டங்களைச் செயல்படுத்த அனுமதிப்பது காவிரி பாசன மாவட்டங்களைச் சேர்ந்த உழவர்களுக்கும், மக்களுக்கும் இழைக்கப்படும் துரோகமாகும்.
தமிழகத்தில் ஏற்கனவே புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த தீர்மானித்த மத்திய அரசு, அதற்கான உரிமத்தை பெங்களூரைச் சேர்ந்த ஜெம் என்ற நிறுவனத்திற்கு வழங்கியது. ஆனால், மக்களின் எதிர்ப்பு காரணமாக அத்திட்டத்திலிருந்து ஜெம் நிறுவனம் விலகியது. அடுத்தக்கட்டமாக, நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களில் 85 கிராமங்களை உள்ளடக்கிய ஒரு மண்டலத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கான உரிமம் ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கும், கடலில் 170 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான இரு உரிமங்கள் வேதாந்தா குழுமத்திற்கும் வழங்கப் பட்டுள்ளன. காவிரி பாசன மாவட்டங்களைச் சீர்குலைக்கும் மத்திய அரசின் சதி இத்துடன் ஓயவில்லை. இந்த ஆண்டு இறுதியில் காவிரி டெல்டாவில் 1863.24 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான இரு உரிமங்கள் ஏலம் மூலம் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
இவ்வாறாக காவிரிப் பாசன மாவட்டங்களில் சுமார் 5000 சதுர கிலோ மீட்டருக்கும் அதிகப் பரப்பளவில் ஆறு ஹைட்ரோ கார்பன் திட்டங்களைச் செயல்படுத்தினால், அப்பகுதியில் நடைபெற்று வரும் விவசாயத்திற்கு எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்பதை நினைத்துப் பார்க்கவே அச்சமாகவும், கவலையாகவும் உள்ளது.
காவிரி பாசன மாவட்டங்கள் முப்போகம் விளையும் பூமியாகும். அங்கு வாழும் ஒன்றரைக் கோடிக்கும் கூடுதலான மக்களில் பெரும்பான்மையினருக்கு விவசாயம் தான் முக்கிய வாழ்வாதாரமாக திகழ்கிறது. அங்கு வேளாண்மை வளம் கொழிப்பதை உறுதி செய்ய வேண்டிய மத்திய அரசு, உழவை ஒழித்து விட்டு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வள பூமியாக மாற்றத் துடிப்பதை அனுமதிக்க முடியாது. மீத்தேன் எரிவாயு, ஷேல் கேஸ், கச்சா எண்ணெய் உள்ளிட்ட வளங்களை தோண்டி எடுக்கும் பூமியாக காவிரி பாசன மாவட்டங்கள் மாற்றப்பட்டால் உணவுக்காக மற்ற மாநிலங்களிடமும், வெளிநாடுகளிடமும் கையேந்தி நிற்க வேண்டிய நிலை தமிழகத்திற்கு ஏற்படும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டு விடக்கூடாது.
அதனால் தான் காவிரி பாசன மாவட்டங்களில் மீத்தேன், பாறை எரிவாயு உள்ளிட்ட எந்த வகையான ஹைட்ரோ கார்பன் திட்டங்களையும் செயல்படுத்தக்கூடாது என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. அதற்கு மாறாக, மீண்டும், மீண்டும் காவிரி பாசன மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை மத்திய அரசு திணிப்பதை அனுமதிக்க முடியாது. காவிரி பாசன மாவட்டங்களில் செயல்படுத்துவதற்காக இப்போது அறிவிக்கப்பட்டுள்ள ஒரு திட்டத்தையும், விரைவில் அறிவிக்கப்படவுள்ள இரு திட்டங்களையும் மத்திய அரசு கைவிட வேண்டும். அத்துடன் காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் மிகப்பெரிய மக்கள் போராட்டத்தை பா.ம.க. நடத்தும்." என குறிப்பிட்டுள்ளார்!