குடும்ப நலத்துறைக்கான பிரத்யேக சமூக வலைதளத்தத்தினை துவங்கி வைத்தார் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர்!
இன்று (03.01.2018) சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறைக்கான பிரத்யேக சமூக ஊடக வலைதளம் (பேஸ்புக், டிவிட்டர், யூடியுப்), மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு தகவல்கள் மற்றும் குறும்படங்கள் திரையிட 15 வண்ண தொலைக்காட்சி பெட்டிகள், நோயாளிகள் மற்றும் பார்வையாளர்கள் பயன்படுத்தும் மின்தூக்கி மற்றும் மருத்துவமனை சுவர்களில் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு, ஆலோசனை அடங்கிய வண்ண சுவரொட்டிகள் அறிமுக விழா மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
அப்பொழுது பேசிய சி. விஜயபாஸ்கர் அவர்கள் தெரிவித்ததாவது...
"அம்மா அவர்களின் அரசு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் நலத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் அதிகரிக்கவும், புதிய திட்டங்களை தெரிவிக்கவும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனையின் சாதனைகளை தெரிவிக்கவும், பொது மக்களுக்கு எழும் பொதுவான சுகாதாரம் குறித்த சயதேகங்களை தெளிவுபடுத்திக் கொள்ள வசதியாக முகநூல் பக்கம் துவங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொது மக்கள் படித்து தெரிந்துகொள்வதோடு கருத்துக்களை தெரிவிக்கவும் மற்றும் கேள்விகளை எழுப்பவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. முகநூல் பக்கத்தில் பொது மக்களால் எழுப்பப்படும் கேள்விகளுக்கு விடை அளிப்பதற்காக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் உயர் அலுவலர்களைக் கொண்ட வாட்ஸ்அப் குழு (Whatsapp Group) ஏற்படுத்தப் படவுள்ளது. மேலும் பொதுமக்களிடையே மருத்துவம் சார்யத விழிப்புணர்வினை அதிகரிக்க யூடியூப் சேனல் (Youtube Channel) அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் மூலம் தயாரிக்கப்பட்ட விழிப்புணர்வு காணொலி காட்சிகள் பதிவேற்றப்படும். (www.Facebook.com/DoHFWTN, www.twitter.com/DoHFWTN, www.youtube.com/channel/UChbL58SKSC6m4m5O_LGD5g). மேலும் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் தகவல், கல்வி மற்றும் தொடர்பு நடவடிக்கைகளின் காணொலி காட்சிகளை பொது மக்களின் விழிப்புணர்விற்காக திரையிட 15 தொலைகாட்சி பெட்டிகள் சென்னை அரசு பொது மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ளது.
தகவல், கல்வி மற்றும் தொடர்பு நடவடிக்கைகளின் (IEC) ஒரு பகுதியாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மின்தூக்கியின் (Lift) சுவர்களில் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு, ஆலோசனை அடங்கிய வண்ண சுவரொட்டிகள் அமைக்கவும் சென்னையிலுள்ள மூன்று அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் தலா ரூ.5/- இலட்சம் வழங்கப்பட்டது. முதற்கட்டமாக இச்செயல்முறைகள் சென்னை அரசு பொது மருத்துவமனையில் செயல்படுத்தப்படுகின்றன" என தெரிவித்தார்!