சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவச்சிலை திறக்கப்பட உள்ளது. குடியுரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு கலந்து கொண்டு மே 28 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு திறக்கிறார். அதனைத் தொடர்ந்து சிலை திறப்பு நிகழ்ச்சிகள் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற இருக்கின்றன. இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திமுகவினருக்கு மடல் எழுதியுள்ளார்.
அவர் எழுதியுள்ள மடலில் " தமிழ்நாட்டின் மூத்த தலைவராகவும், திராவிட இயக்கத்தின் நெடும்பயணத்தில் முக்கால் நூற்றாண்டுக்கு மேல் ஓய்வின்றி உழைத்தவருமான கலைஞர் அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் திருவுருவச் சிலை திறக்கப்படும் நாள், நம் அனைவருக்கும் தித்திப்பான நாள்.தமிழ்நாட்டில் அதிக ஆண்டுகள் முதலமைச்சர் பொறுப்பை வகித்தவர் என்ற பெருமையும் நம் ஆருயிர்த் தலைவருக்கேயுரியது.
ஐந்தாவது முறை அவர் முதலமைச்சராகப் பொறுப்பு வகித்தபோது, சென்னை அண்ணா சாலையில், எந்த ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகத்தை எழிலுடனும் வலிவுடனும் அமைத்தார். ஆங்கிலேயர் ஆட்சியில் ‘மவுண்ட் ரோடு’ எனப் பெயரிடப்பட்டு, உருவாக்கப்பட்ட சென்னையின் இதயப் பகுதிக்கு, ‘அண்ணா சாலை’ என்று பெயர் சூட்டியவரே நம் ஆருயிர்த் தலைவர்.
மேலும் படிக்க | பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணி: தேவகவுடாவும் சந்திரசேகர் ராவும்
இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டினை சென்னையில் நடத்தி, கடற்கரையில் தமிழ்ச் சான்றோர்களுக்கு சிலை அமைத்த முதலமைச்சர் அண்ணா அவர்களுக்கு, அண்ணா சாலையில் சிலை அமையக் காரணமாக இருந்தவரும் தலைவர் கலைஞர் அவர்கள்தான். தந்தை பெரியாருக்கு அண்ணா சாலையில் சிம்சன் நிறுவனம் அருகே, தி.மு.கழகத்தின் சார்பில் சிலை அமைத்து சிறப்பு சேர்த்தவரும் தலைவர் கலைஞர்தான்.
சென்னை மாநகராட்சியை முதன் முதலாக 1959-ஆம் ஆண்டில் தி.மு.கழகம் கைப்பற்றிடக் கடுமையாக உழைத்து, அந்த வெற்றிக்காக, பேரறிஞர் அண்ணாவிடம் கணையாழியைப் பரிசாகப் பெற்றவர் முத்தமிழறிஞர் கலைஞர். அவருடைய பேருழைப்பால் கழகம் வெற்றி பெற்ற சென்னை மாநகராட்சியின் சார்பில், அண்ணா சாலை ஜிம்கானா கிளப் அருகே பெருந்தலைவர் காமராசர் அவர்களுக்கு சிலை அமைப்பதற்குத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு அவர்களால் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் சிலை திறந்து வைக்கப்பட்டது.
தமிழ்நாட்டின் தனிப் பெருந்தலைவர்களுக்கு அண்ணா சாலையில் சிலை அமைந்திடக் காரணமாக இருந்த நம் ஆருயிர்த் தலைவர் கலைஞர் அவர்களுக்கு ஒரு சிலை அமைத்திட வேண்டும் என்பது தந்தை பெரியாரின் எண்ணம். பெரியார் அவர்கள் மறைவெய்திய பிறகு, அன்னை மணியம்மையார் அவர்கள் முயற்சி எடுத்து, திராவிடர் கழகத்தின் சார்பில் அண்ணா சாலையில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு சிலை அமைக்கப்பட்டது. அந்த அண்ணா சாலையில் 38 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலை நிறுவப்படுகிறது. சென்னையில் மகத்தான விழாவாக நடைபெறுகிறது.
வள்ளுவர் கோட்டம், அண்ணா மேம்பாலம், கத்திப்பாரா மேம்பாலம், டைடல் பார்க், மெட்ரோ ரயில் திட்டம், அண்ணா நூற்றாண்டு நூலகம், கோயம்பேடு பேருந்து நிலையம் என அவர் பெயரை உச்சரிக்கும் அடையாளங்களே தமிழ்நாட்டின் தலைநகரெங்கும் நிறைந்துள்ளன. அத்தகைய மாபெரும் தலைவருக்குத் தமிழ்நாடு அரசின் சார்பில் திருவுருவச் சிலை திறக்கப்படுவதை எண்ணி, உங்களைப் போலவே நானும் மகிழ்கிறேன்; நெகிழ்கிறேன்! முதலமைச்சர் என்ற முறையில் விழாவை சிறப்பித்துத் தர வேண்டும் என உடன்பிறப்புகளான உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வைத்த ‘செக்’.!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR