Tamil Nadu SSLC Exam Result 2023: கடந்த ஏப். 6ஆம் தேதி தொடங்கி ஏப். 20ஆம் தேதி வரை நடைபெற்ற 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த 9 லட்சத்து 14 ஆயிரத்து 320 மாணவ, மாணவியர் எழுதினர். அந்த வகையில், அவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணியளவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை டிபிஐ வளாகத்தில் வெளியிட்டார்.
மொத்த தேர்ச்சி விகிதம்
இதில், தேர்ச்சி பெற்றவர்களின் சதவீதம் 91.39 ஆக பதிவாகியுள்ளது. இது கடந்தாண்டை விட ஒரு சதவீதம் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு 90.07 சதவீதத்தினர் தேர்ச்சியடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. மாணவியர் 94.66 சதவீதமும், மாணவர்கள் 88.16 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட மாணவியர் 6.50 சதவீதம் அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
முடிவுகளை எதில் பார்ப்பது?
தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலமாக அறிந்துகொள்ளலாம். அவர்கள் பதிவு செய்துள்ள மொபைல் நம்பர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை தரப்பிலும் மதிப்பெண்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. பள்ளிகளின் வகைப்பாடு வாரியான தேர்ச்சி விகிதம், பாட வாரியான தேர்ச்சி விகிதம், 100 சதவீதம் மதிப்பெண்களை பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை உள்ளிட்ட தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும் படிக்க | Tamil Nadu 10th Result: வெளியானது 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்!
வருவாய் மாவட்ட வாரியாக...
பெரம்பலூர் மாவட்டம் 97.67 சதவீத தேர்ச்சியை பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது. சிவகங்கை 97.53 சதவீதத்துடன் இரண்டாமிடமும், விருதுநகர் 96.22 சதவீதத்துடன் மூன்றாமிடமும் பிடித்துள்ளன. காரைக்கால் 79.43 சதவீத தேர்ச்சியுடன் கடைசி இடத்தில் உள்ளது. சென்னையில் 89.14 சதவீதம் தேர்ச்சி விகிதம் பதிவாகி 30ஆவது இடத்தை பிடித்துள்ளது.
100% தேர்ச்சி பெற்ற பள்ளிகள்
மொத்தம் 12,638 பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் தேர்வெழுதினர். இதில், 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 718 ஆகும். இதில், 100% தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் எண்ணிக்கை 1,026 ஆகும்.
அரசு பள்ளிகளில் படித்த மாணவ, மாணவியர்கள் 87.45 சதவீதத்தினர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு உதவி பெறும் பள்ளிகளில் இது 92.24 சதவீதமாக உள்ளது. தனியார் சுயநிதிப் பள்ளிகளில் படித்த மாணவ, மாணவியர்கள் மொத்தம் 97.38 சதவீதத்தினர் தேர்ச்சியடைந்துள்ளனர்.
கணிதத்தில் அதிக சென்ட்டம்
மேலும், இருப்பாலர் பள்ளிகளில் பயின்றோர் 91.58 சதவீதமும், பெண்கள் பள்ளிகளில் பயின்றோர் 94.38 சதவீதமும், ஆண்கள் பள்ளிகளில் பயின்றோர் 83.25 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆங்கிலப் பாடத்தில் தான் அதிகமானோர் (98.93%) தேர்ச்சியடைந்துள்ளனர். தமிழில் யாரும் 100க்கு 100 மதிப்பெண்களை பெறவில்லை. ஆங்கிலத்தில் 89 பேர், 100க்கு 100 மதிப்பெண்களை பெற்றுள்ளனர். கணிதத்தில் 3 ஆயிரத்து 649 பேரும், அறிவியலில் 3 ஆயிரத்து 584 பேரும், சமூக அறிவியலில் 320 பேரும் சென்ட்டம் எடுத்துள்ளனர்.
மொத்தம் 10, 808 மாற்றுத்திறனாளிகள் தேர்வெழுதிய நிலையில், 9 ஆயிரத்து 703 பேர் (89.77%) தேர்ச்சியடைந்துள்ளனர். அதேபோல், தேர்வெழுதிய 264 சிறைவாசிகளில், 112 பேர் (42.42%) தேர்ச்சியடைந்துள்ளனர்.
இதேபோல், மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரை நடந்த 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழ்நாடு, புதுச்சேரியைச் சேர்ந்த சுமார் 7 லட்சத்து 70 ஆயிரம் மாணவர்கள் எழுதினர். இந்த தேர்வின் முடிவுகள் இன்று மதியம் 2 மணியளவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ