முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் பெரும்புள்ளியாக இருந்தாலும் நடவடிக்கை பாயும் என அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த செப்டம்பர் மாதம் நடத்திய குரூப்-4 எழுத்துத்தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி, இடைத்தரகர்களையும், முறைகேட்டில் ஈடுபட்டவர்களையும் கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையில் தலைமைச் செயலகத்தில் இந்த விவகாரம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் துறை செயலாளர் ஸ்வர்ணா, TNPSC அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில்; குரூப்-4 முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் எந்த புள்ளியாக இருந்தாலும் அது கருப்பு ஆடுதான். சமுதாயத்திற்கு ஏற்றுக்கொள்ளமுடியாத அந்த கருப்பு ஆடுகள் நிச்சயம் களையெடுக்கப்படும். அரசு அத்தனை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இளைஞர்களும், தேர்வர்களும் எதிர்காலம் கொண்டு பயம்கொள்ள தேவையில்லை. ஒருசில சென்டரில் முறைகேடு நடந்திருந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ளமுடியாது. ஒரு சில மையங்களில் நடந்த முறைகேட்டிற்காக ஒட்டுமொத்த TNPSC மீதும் குற்றம் சொல்ல முடியாது. எந்த ஓட்டையும் இல்லாமல் வருங்காலங்களில் தேர்வு நடத்தப்படும்.
தேர்வு எழுதிய அனைவரது விடைத்தாளும் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. எனவே தவறு செய்தவர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வை ரத்து செய்து முறைகேட்டில் ஈடுபட்ட ஒருசிலருக்காக தேர்வர்கள் அனைவரையும் தண்டிக்க முடியாது. ஒரிசாவில் புற்றீசல் மாதிரி தேவையற்ற கோச்சிங் சென்டர் மற்றும் முறைகேட்டை தடுக்க தனியாக ஒரு சட்டமே இயற்றியுள்ளனர். அதேமாதிரியான சட்டத்தை மாடலாக வைத்து இங்கு ஒரு சட்டத்தை கொண்டுவர அரசு ஆலோசித்து வருகிறது" என்றார்.