போக்குவரத்து தொழிற்சங்களின் வேலை நிறுத்தத்தால் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மாலை தொடங்கிய வேலை நிறுத்தம் போராட்டம் இன்றும் தொடர்ந்தது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களும், பணிக்கு செல்பவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
போக்குவரத்து தொழிற்சங்களின் ஸ்டிரைக்கை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, அப்துல் குத்தூஸ் அமர்வு முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட்டு பணிக்குத் திரும்ப வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும், வேலைநிறுத்தத்தை கைவிட்டு உடனடியாக பணிக்குத் திரும்பவில்லை என்றால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும், ஊதியம் திருப்தி இல்லை என்றால், வேறு பணிக்கு செல்லலாம் என்றும் உத்தரவிட்டது.
ஐகோர்ட் உத்தரவை அடுத்து போக்குவரத்து தொழிற்சங்களின் சென்னையில் ஆலோசனை நடத்தினார்கள். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியது, வேலை நிறுத்தம் தொடரும். வேலை நிறுத்தத்திற்கு அரசு தான் காரணம். நாங்கள் மூன்று நாட்களுக்கு முன்னரே தமிழக அரசிடம் எங்கள் கோரிக்கையும், வேலை நிறுத்த அறிவிப்பையும் தெரிவித்து விட்டோம். அரசின் அச்சுறுத்தலுக்கு அஞ்சமாட்டோம். வரும் திங்கட்கிழமை நீதிமன்றத்தை நாடுவோம். எங்கள் கோரிக்கையை நீதிமன்றம் முன்பு சொல்லுவோம்.