திருப்பூர் அருகே உள்ள சேடர்பாளையம் பாலாஜி நகரில் வசித்துவந்தவர் 35 வயதான முத்துமாரி. திருமணமாகி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கணவரை பிரிந்த முத்துமாரி தனது இரண்டு மகன்களுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். சம்பவத்தன்று விடிந்து நீண்ட நேரம் ஆகியும் வீட்டு கதவுகள் திறக்கப்படாமல் இருந்தன. அப்போது அங்கு சென்ற அக்கம் பக்கத்தினரில் ஒருவர் முத்துமாரியின் பெயரை சொல்லி குரல் கொடுத்த போதும், எந்த பதிலும் வரவில்லை. சந்தேகமடைந்து வீட்டிற்குள் நுழைந்து பார்த்தவர் மிரண்டு போயிருக்கிறார். தாயும், பிள்ளைகளும் ரத்த வெள்ளத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தனர்
உடனே தகவல் கொடுத்து முத்துமாரியின் வீட்டிற்கு வந்த காவல்துறையினர் இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், சம்பவ இடத்தில் இருந்த ரத்தம் படிந்த பாய் மற்றும் இரும்பு கம்பிகள் உள்ளிட்ட பொருட்களையும் கைப்பற்றினர். தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீட்டில் பதிவாகி இருந்த ரேகைகளை சேகரித்து கொண்டனர். பின்னர் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளியை பிடிக்க தீவிர விசாரணையை தொடங்கினர். அப்போதுதான் காவல்துறையினருக்கு கிடைத்த சில தகவல்கள் புருவம் உயர்த்த வைத்தது.
கணவரின் உதவி இல்லாமல் குடும்ப வறுமையை தனியாக சுமக்க தொடங்கிய முத்துமாரி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இதற்கிடையே, முத்துமாரிக்கும் அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் நட்பாக பழகிய இருவருக்கும் இடையே நாளடைவில் அது தகாத உறவாக மாறியது. கணவரை பிரிந்த துக்கம் கார்த்திக்கின் வருகையால் கலைந்து போனது. இதற்கிடையில்தான், வீட்டில் இருந்த முத்துமாரி தனது பிள்ளைகளுடன் மர்மமான முறையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதனையடுத்து முத்துமாரியின் ரகசிய காதலன் கார்த்திக்கின் மீது காவல்துறையினரின் சந்தேகப்பார்வை விழுந்தது. உடனே அவரை பிடித்து விசாரித்தால், எதாவது வெளிவரும் என்று வேட்டையில் இறங்கினார்கள். முதற்கட்டமாக கார்த்திக் வேலை செய்த ஒரு பல்பொருள் அங்காடியில் அவரது உருவம் பதிவான புகைப்படத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் கார்த்திக்கை விசாரணை வலைக்குள் கொண்டுவர முடியாமல் திணறிய காவல்துறையினருக்கு கடைசியாக அவர் சடலமாக கிடைத்தார்.
காங்கேயம் படியூர் அருகே உள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் சைக்கிளுடன் ஒருவர் பிணமாக கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் அது கார்த்திக்கின் உடல் என்பதை உறுதி செய்தார்கள். மூன்று உயிர்கள் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்தவர் இப்படி சடலமாக மீட்கபட்டது காவல்துறையினரை அதிர்ச்சியில் உறைய வைத்தது. இனி யாரிடம் இருந்து முத்துமாரி மற்றும் அவரது பிள்ளைகளின் மரணத்திற்கு விடை தேடுவது ; இருந்த ஒருவரின் உயிரும் பிரிய அதுவும் கொலையா ? தற்கொலையா ? என்ற கோணத்தில் பயணிக்க தொடங்கி விட்டது. காவல்துறையினரின் விசாரணை தொடரும்... பிரிந்த 4 உயிர்களுக்கும் பதில் கிடைக்கும் வரை...
மேலும் படிக்க | மரம் அறுக்கும் இயந்திரத்தால் மனைவி மற்றும் பிள்ளைகளை அறுத்து கொன்ற ஐடி ஊழியர்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR