TVK Conference, Vijay Speech Important Points Update : நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 27) நடக்கிறது. விக்கிரவாண்டியில் பிரம்மாண்டமாக நடைபெறும் இம்மாநாட்டுக்கான ஏற்பாடுகள் எல்லாம் தடபுடலாக ரெடியாகிவிட்டது. தமிழகம் முழுவதும் இருக்கும் விஜய் ரசிகர்கள், தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் எல்லாம் ஏற்கனவே மாநாடு நடைபெறும் இடத்தில் குழும தொடங்கிவிட்டனர். அவர்களுக்கு அதி காலையில் இருந்து மாநாட்டு திடலுக்குள் என்டிரியாக அனுமதி கொடுக்கப்பட்டு வருகிறது. தவெக தொண்டர்கள் எல்லோரும் நடிகர் விஜய்யை பார்க்கவும், அவரின் பேச்சை கேட்கவும் ஆவலாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். விஜய் என்ன பேசப்போகிறார் என்ற தகவலும் கசிந்திருக்கிறது.
மாநாட்டு பேச்சுக்கு தயாரான நடிகர் விஜய்
அரசியல் கட்சி தொடங்கிய பிறகு முதன்முறையாக அரசியல் ரீதியாக நேரடியாக களத்துக்கு வரும் விஜய், இந்த விக்கிரவாண்டி மாநாட்டில் தான் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகளை அதிகாரப்பூர்வமாக இன்று வெளியிட்டு உரையாற்றுகிறார். இதற்காக விஜய் கடந்த ஒருவாரமாகவே தயாராகிக் கொண்டிருக்கிறார். அப்போது, தன்னுடைய பேச்சில் என்னவெல்லாம் இருக்க வேண்டும் என வார்த்தைகளை பார்த்து பார்த்து தேர்வு செய்திருக்கிறார். அவருக்கு தந்தை சந்திரசேகரும் ஆலோசனை வழங்கியிருப்பதாக தெரிகிறது. அதுமட்டுமல்லாமல் விஜய் நெருக்கமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் அரசியல் ஆலோசனைக் குழுவும் விரிவாக அலசி ஆராய்ந்து பேச்சை தயார் செய்து கொடுத்திருக்கிறது. அந்தவகையில், முக்கியமாக 5 விஷயங்களை அடிக்கோடிட்டு விஜய் பேச இருக்கிறார்.
மாநில உரிமை : தமிழ்நாடு அரசியல் கட்டமைக்கப்பட்டதே மாநில உரிமை என்ற ஒற்றைப் புள்ளியில் இருந்து தான் என்பதால் விஜய்யும் இந்த புள்ளியில் இருந்தே தன்னுடைய பேச்சை தொடங்க இருக்கிறார். தமிழ்நாட்டின் நலனுக்காக தமிழக வெற்றிக் கழகம் உறுதியாக களத்தில் இருக்கும், மாநில உரிமைகளை எந்தவொரு இடத்திலும் தவெக சமரசம் செய்து கொள்ளாது. தமிழ் மொழி, தமிழ்நாடு இரண்டுக்கும் அரணாக தவெக இருக்கும் என உறுதியளிக்க உள்ளார் விஜய்.
சாதி, மத அரசியல் : தமிழக வெற்றிக் கழகம் சாதி, மதம், இனவாத அரசியலை முன்னெடுக்காது என பிரகடனப்படுத்த இருக்கிறார் விஜய். சாதி ஒழிப்பு களத்தில் வாக்கு அரசியலுக்காக எந்தவொரு சமசரமும் செய்து கொள்ளாமல் தமிழக வெற்றிக் கழகம் உறுதியாக களமாடும் என அறிவிக்க உள்ளார். வன்கொடுமைகளுக்கு எதிராக தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரம் இருக்கும் என பேச உள்ள விஜய், மதவாத அரசியலை உறுதியோடு தவெக எதிர்க்கும் என பேச உள்ளார். மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தக்கூடிய எந்த அரசியலையும், சதி வலையையும் முன்களத்தில் இருந்து தவெக எதிர்க்கும் என பேச இருக்கிறார் விஜய்.
வெளிப்படையான நிர்வாகம்: லஞ்சம், ஊழல் இல்லா அரசியலை தமிழக வெற்றிக் கழகம் உறுதியோடு முன்னெடுக்கும் என சொல்ல இருக்கிறார் விஜய். வெளிப்படையான நிர்வாகத்தை கொடுப்பேன் என மாநாட்டு மேடையில் பேசப்போகும் விஜய், அதற்கான வழிமுறைகளையும், கொள்கை முழக்கத்தையும் முன்வைக்க இருக்கிறார். எல்லா துறைகளின் செயல்பாடு குறித்தும் மக்கள் நேரடியாக தெரிந்து கொள்ளும் வகையிலும், டெண்டர் உள்ளிட்ட மறைமுக ஊழல், கமிஷன்களை தவெக எப்படி ஒழிக்கும் என்பதையும் தன்னுடைய பேச்சில் சொல்ல உள்ளார்.
பெரியார், காமராஜர் அரசியல் : மாநில உரிமைகள் குறித்து தன்னுடைய பேச்சில் பேசப்போகும் விஜய், பெரியார், காமராஜர் ஆகியோரின் அரசியல் கொள்கை முழக்கங்கள் வழியில் தவெக பயணிக்கும் என சொல்ல உள்ளார். அவர்கள் தமிழ்நாட்டைப் பற்றி கண்ட கனவை நிறைவேற்றும் வகையில் தமிழக வெற்றிக் கழகமும், கட்சி தொண்டர்களும் செயல்படுவார்கள் என ஒரு கொள்கை முழக்கமாக அறிவிக்க இருக்கிறார். பெண்கள் முன்னேற்றம் குறித்தும் விஜய் பேச இருக்கிறார்.
அரசியல் அட்டாக் இல்லை : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மேடை என்பதால் விஜய் யாரையும் விமர்சிக்க வேண்டாம் என முடிவெடுத்திருக்கிறார். தமிழ்நாட்டை ஆண்ட, ஆண்டு கொண்டிருக்கிற அதிமுக, திமுக குறித்து பேசவில்லையாம். இன்னும் ஒரு படம் முழுமையாக நடித்து முடிக்க வேண்டியிருப்பதால் முழுக்க முழுக்க தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் கொள்கை பிரகடனமாக மட்டும் இந்த மாநாடு இருக்கட்டும், படம் வெளியான பிறகு முழுநேர அரசியலில் இறங்கிய அடித்துக் கொள்ளலாம் என்ற முடிவில் இருக்கிறார் விஜய், அதனால் இன்று எந்த காரசாரமான பேச்சுகளும் விஜய் பேசப்போவதில்லை என்பது தான் லேட்டஸ்ட் அப்டேட்.
மேலும் படிக்க | தவெக மாநாட்டில் ஏற்பாடுகள் எப்படி? 360° வீடியோ…
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ