அரசு மருத்துவமனைகளில் 5,000 படுக்கை வசதிகள் உள்ளன; அதை 10,000ஆக உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறியுள்ளார்!!
தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா வைரஸால் பாதிப்படைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதில், சென்னையில் மட்டும் தினமும் 1,000 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்படுகிறது. இன்று மட்டும் சென்னையில் 1,390 பேருக்கு பாதிப்பு உள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது 25,937 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் படுக்கைகள் உட்பட பல பற்றாக்குறைகள் மருத்துவமனைகளில் நிலவுவதாக குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளன.
அரசுத் தரப்பில் இந்தக் குற்றச்சாட்டுகள் மறுக்கப்பட்டு வருகிறது. எனினும், இதுதொடர்பான குழப்பங்கள் நிலவி வருகின்றன. ஒருபுறம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்வதும் மறுபுறம் மருத்துவமனைகளில் பற்றாக்குறைகள் இருப்பது தொடர்பான குற்றச்சாட்டுகளும் அதிர்ச்சியளிக்கும் விதமாக இருந்து வருகின்றன. இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் கூடுதலாக மருத்துவர்களை நியமிப்பது தொடர்பான பணி நியமன ஆணைகளை தமிழக சுகாதாரத்துறைச் செயலர் பீலா ராஜேஷ் செய்தியார்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியுள்ளதாவது... சென்னையை பொறுத்த அளவில் தனியார் மருத்துவமனைகளில் மொத்தம் 13 ஆயிரம் படுக்கை வசதிகள் உள்ளன. அதில் கொரோனா நோய்க்கு எத்தனை படுக்கைகள் ஒதுக்கப்படுகிறது என்பதை கவனித்து அதை படிப்படியாக உயர்த்தி வருகிறோம். அரசு மருத்துவமனைகளில் இப்போதுள்ள நிலையில் 5 ஆயிரம் படுக்கை வசதி உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்புள்ளவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள படுக்கை எண்ணிக்கை இதுவாகும். இது தவிர மற்ற உடல்நல பிரச்சனைகளுக்கும் படுக்கை வசதி உள்ளது.
READ | வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க 58 விமானங்கள்: மத்திய அரசு
அரசு மருத்துவமனைகளில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதற்கான படுக்கை வசதி எண்ணிக்கையை 10 ஆயிரமாக உயர்த்த போகிறோம். முதலில் அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்தோம். எனவே, கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கையை ஊடகங்களிடம் தெரிவிப்பது எளிதாக இருந்தது. இப்போது தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை அளிக்கின்றனர்.
எனவே, இப்போது அவர்களிடம் இருந்தும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை பெற்று வருகிறோம். எண்ணிக்கையில் மாறுபாடு இருக்க கூடாது என்பதற்காக ஒரு கமிட்டியை உருவாக்கி உள்ளோம். அவர்கள் தனியார் மருத்துவமனைகளுடன் ஆலோசித்து, உரிய எண்ணிக்கையை பெறுவார்கள். இவ்வாறு பீலா ராஜேஷ் தெரிவித்தார். சென்னையில் பல மருத்துவமனைகளில் கொரோனா பலி எண்ணிக்கை அரசிடம் பதிவு செய்யப்படவில்லை என்று ஊடகங்களில் வெளியான செய்திகளையடுத்து பீலா ராஜேஷ் இந்த விளக்கத்தை அளித்தார்.