இஸ்ரேலில் இருந்து இரண்டு ஜெனரேட்டர்களை வாங்கியதில் முறைகேடு மற்றும் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக பப்புவா நியூ கினியாவின் முன்னாள் பிரதமர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் இருந்து திரும்பி வந்த பின்னர் பீட்டர் ஓ நீல் போர்ட் மோர்ஸ்பியில் உள்ள ஜாக்சனின் சர்வதேச விமான நிலையத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். முன்னதாக அவர் கொரோனா முழு அடைப்பு காரணமாக பிரிஸ்பேனில் சிக்கித் தவித்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது.
பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார் எனவும், கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக அவர் இரண்டு வாரங்களுக்கு வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டு இருப்பதாகவும் உள்ளூர் ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஓ'நீல் தனது அரசாங்கத்தின் பல ராஜினாமாக்களை எதிர்கொண்ட பின்னர் கடந்த 2019-ல் தனது பதவியில் இருந்து விலகினார். பதவி விலகலுக்கு முன்னர் அவர் ஏழு ஆண்டுகள் பப்புவா நியூ கினியாவை வழிநடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓ'நீல் நாட்டை வழிநடத்தும் போது இஸ்ரேலில் இருந்து இரண்டு மின் ஜெனரேட்டர்களை 50 மில்லியன் கினாவுக்கு (14.2 மில்லியன் அமெரிக்க டாலர்) வாங்கியதாக தெரிகிறது. இதன் போது முறைகேடு மற்றும் ஊழல் நடைப்பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, இந்த விவகாரத்தில் தற்போதைய அரசாங்கம் விசாரணை மேற்கொண்டது.
ஆஸ்திரேலிய பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷன் மேற்கோள் காட்டிய அறிக்கையில், காவல்துறை அதிகாரி ஹோட்ஜஸ் எட்டே, ஜெனரேட்டர்களை பாராளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் மற்றும் டெண்டர் செயல்முறை இல்லாமல் வாங்குவதற்கு ஓ'நீல் பணம் செலுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.
"முறைகேடு, அலுவலக துஷ்பிரயோகம் மற்றும் உத்தியோகபூர்வ ஊழல் போன்ற குற்றங்களுக்கு நியாயமான சான்றுகள் உள்ளன" என்றும் எட்டே கூறுகிறார்.
முன்னதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஓ'நீலை வேறு ஒரு பிரச்சினையில் கைது செய்ய காவல்துறையினர் முயன்றனர், ஆனால் ஓ'நீல் நீதிமன்றத்தில் தன் மீதான குற்றச்சாட்டை எதிர்த்து வாதாடியபோது காவல்துறையினர் இந்த குற்றச்சாட்டை வாபஸ் பெற்றனர். எனினும் தற்போது ஜனரேட்டர் ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் ஓ’நீலை கைது செய்துள்ளனர்.