US Presidential Election 2024: அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 9ஆம் தேதி அன்று நடைபெற இருக்கிறது என்றாலும், இப்போது இருந்தே தினமும் அங்கு அரசியல் களம் என்பது பரபரப்படைந்திருக்கிறது. உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றான அமெரிக்காவின் அதிபர் தேர்தல் என்பது உலகளவில் அதிகம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. எனவே, அமெரிக்க மக்கள் மட்டுமின்றி உலகளவில் உள்ள பல மக்களும் அமெரிக்க தேர்தலை எதிர்நோக்கி காத்திருப்பார்கள்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. அவருக்கான தேர்தல் பரப்புரைகளும் தொடங்கப்பட்ட நிலையில், கடந்த சில மாதங்களாக அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும் தகவல்கள் கசிந்தன. அதேநேரத்தில் எதிர்த்து களம் காணும் குடியரசு கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் உடனான விவாதத்தின்போது, ஜோ பைடன் திணறிய சம்பவங்களையும் காண முடிந்தது.
வேட்பாளராகும் ஜோ பைடன்?
அந்த வகையில், சில நாள்களுக்கு முன் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தான் விலகிக்கொள்வதாக தற்போதைய அதிபர் ஜோ பைடன் அறிவித்தார். மேலும், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸை, ஜோ பைடன் முன்மொழிந்தார். ஜோ பைடன் கமலா ஹாரிஸை வேட்பாளராக முன்மொழிந்த பின்னர், கமலா ஹாரிஸிற்கு ஆதரவாக அதிக நிதி திரளத் தொடங்கியது. மேலும், ஜனநாயக கட்சியின் வேட்பாளர் போட்டியிலும் கமலா ஹாரிஸ் முன்னிலை பெறுவார் எனவும் கூறப்பட்டது.
ஆகஸ்ட் மாதம் நடக்கும் ஜனநாயக கட்சியின் தேசிய மாநாட்டிலேயே (National Democratic Convention) அக்கட்சியின் அதிபர் வேட்பாளர் உறுதிசெய்யப்படுவார் எனலாம். இந்தச் சூழலில் பலரும் கமலா ஹாரிஸிற்கு தங்களின் ஆதரவை தெரிவித்து வந்த நிலையில், முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிசெல் ஒபாமா ஆகியோர் மட்டும் மௌனம் காத்ததாக கூறப்பட்டது. ஜோ பைடன் போட்டியிடாவிட்டால் அதிபர் வேட்பாளராக மிசெல் போட்டியிட திட்டமிட்டிருந்ததாகவும், தற்போது கமலா ஹாரிஸ் பலராலும் முன்னிலைப்படுத்தப்படுவாதல் ஒபாமா தரப்புக்கு அதிருப்தி என்றும் தகவல்கள் பரவின.
ஒபாமாவும் மனைவியும் ஆதரவு
ஆனால், இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கமலா ஹாரிஸிற்கு பராக் ஒபாமா மற்றும் மிசெல் ஒபாமா ஆகியோர் தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளனர். இவர்களின் ஆதரவால் கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராவது ஏறத்தாழ உறுதியாகிவிடும் எனலாம். அதுமட்டுமின்றி, தற்போது டொனால்ட் டிரம்பின் பக்கம்தான் அதிக நிதி திரள்கிறது என்றும் அவருக்குதான் ஆதரவு அதிகமிருக்கிறது என்றும் கூறப்பட்டது. அதுவும் துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பின் டிரம்பிற்கான ஆதரவு அபரிமிதமாக உள்ளது.
அந்த வகையில், தற்போது பராக் ஒபாமாவின் ஆதரவு என்பது கமலா ஹாரிஸின் பிரச்சாரத்தை வலுப்படுத்தியிருக்கிறது எனலாம். இதன்மூலம், கமலா ஹாரிஸிற்கு ஆதரவாக இன்னும் நிதிகள் திரளும் என கணிக்கப்படுகிறது. முன்னாள் அதிபரான பராக் ஒபாமா, ஜனநாயக கட்சியில் மிக பிரபலமான தலைவர் ஆவார். அவர் அதிபர் பதவியில் இருந்து வந்து 10 ஆண்டுகள் கழிந்துவிட்டாலும், மக்களிடம் செல்வாக்கு நிறைந்த தலைவராக தொடர்கிறார், பராக் ஒபாமா. எனவே, அவரின் ஆதரவு இருப்பதால் பலரும் கமலா ஹாரிஸை நோக்கி நகர்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருக்கின்றன.
ஒரு நிமிட வீடியோ
பராக் ஒபாமா - மிசெல் ஒபாமா ஆகிய இருவரும் சேர்ந்து கமலா ஹாரிஸ் உடன் உரையாடும் ஒரு தனிப்பட்ட மொபைல் உரையாடலின் வீடியோ தற்போது வெளியாகியிருக்கிறது. இன்று வெளியான அந்த வீடியோவில்தான் கமலா ஹாரிஸிற்கு பராக் - மிசெல் தங்களின் ஆதரவை தெரிவித்திருக்கின்றனர்.
அந்த மொபைல் காலில்,"உங்களை அதிபர் வேட்பாளராக முன்மொழிவதை விட எனக்கும், மனைவி மிசெலுக்கும் வேறு எதுவும் பெருமைக்குரியதாக இருக்காது. இந்த தேர்தலில் எங்களால் முடிந்தவற்றை செய்து உங்களை இந்த தேர்தலில் வெற்றி பெற வைத்து, ஓவல் அலுவலகத்திற்குள் நுழைய வழிவகை செய்வோம்" என பராக் ஒபாமா, கமலா ஹாரிஸிடம் தெரிவித்தார்.
"உங்களை நினைத்து மிகவும் பெருமைக்கொள்கிறேன். இது வரலாற்றுச் சிறப்புமிக்கதாக அமைய போகிறது" என மிசெல் ஒபாமாவும் தனது ஆதரவை கமலா ஹாரிஸிடம் தெரிவித்தார். அதற்கு கமலா ஹாரிஸ்,"இருவருக்கும் மிக்க நன்றி, இது எனக்கு பெரும் பேரு..." எனவும் பதில் அளித்திருந்தார். மேலும் இது ஒபாமா - கமலா ஹாரிஸ் உடன் பேசிய உண்மையான மொபைல் கால் ஆகும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ