அதிபர் ஒபாமா ஹிலரிக்கு வெளிப்படையாக தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். அதிபர் பதவிக்கு ஹிலரியை விட தகுதியானவர்கள் யாரும் இல்லை என்று பாராட்டியும் உள்ளார். ஹிலரியுடன் இணைந்து நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரத்திற்குச் செல்ல ஆர்வத்துடன் காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
ஒபாமா:- அதிபர் பதவியின் பொறுப்புக்களையும், சிரமங்களையும் நன்றாகவே அறிவேன். நானும் ஹிலரியும் உட்கட்சி தேர்தலில் போட்டி போட்ட காலமாகட்டும், பின்னர் என்னுடன் இணைந்து வெளியுறவு துறை அமைச்சராக பணியாற்றிய காலமாகட்டும், பின்லாடனை தீர்த்துக்கட்டும் முக்கிய முடிவை எடுத்த நேரமாகட்டும், ஹிலரியின் முடிவுகளையும், உறுதியையும் பார்த்திருக்கிறேன். எவ்வளவு சிரமமான வேலையாக இருந்தாலும் திறம்பட செய்து முடிப்பதில் வல்லவர். அமெரிக்க அதிபர் பதவிக்கு ஹிலரியை விட தகுதியானவர்கள் யாரும் இல்லை. அவருடன் இணைந்து தேர்தல் களத்தில் பணியாற்ற காத்திருக்கிறேன் என்று ஒபாமா கூறியுள்ளார்.
ஹிலரி கிளிண்டன்: ஓபாமாவுக்கு நன்றி தெரிவித்த ஹிலரி, அதிபர் ஒபாமாவின் ஆதரவு தனக்கு மிகவும் பெருமைக்குரியதாகும். எனக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளது. நான் தயாராக இருக்கிறேன் என்று ஹிலரி டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார். ஒபாமாவைத் தொடர்ந்து, துணை அதிபர் ஜோ பைடனும் ஹிலரிக்கு ஆதரவைத் தெரிவித்துள்ளார்.